பொன்மலை ரயில்வே பணிமனையில் தீ விபத்து

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் திங்கள்கிழமை திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் திங்கள்கிழமை திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ரயில் என்ஜின்கள் பராமரிப்பும் சில ரயில் பெட்டிகள் பராமரிப்பும்  நடைபெற்று வருகின்றன. திங்கள்கிழமை காலை 11 மணியளவில் பணிமனை வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. புதர் பகுதியில் பிடித்த தீ,  காற்றின் வேகத்தால் மள மளவென பரவி,  பராமரிப்பின்போது அகற்றப்பட்டு அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பயனற்ற பொருள்களில் பற்றி எரிந்தது.  
தகவலறிந்து வந்த கண்டோன்மெண்ட்,  நவல்பட்டு,  பெல் தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த  வீரர்கள்  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இதில், ஏராளமான கழிவுப்பொருள்கள் எரிந்ததாக கூறப்படுகின்றன. கிரீஸ் மற்றும் என்ஜின் ஆயில் உள்ளிட்டவை அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்ததால் தீ எளிதில் பற்றி எரிந்ததாகவும், அதனால் ஏராளமான கழிவுப்பொருள்கள் எரிந்ததாகவும் கூறப்படுகிறது. சேதம் குறித்த விவரத்தை பணிமனை நிர்வாகம் தெரிவிக்க மறுத்துவிட்டது.
பிரத்யேக  தீயணைப்பு வண்டி அவசியம் : ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட பொன்மலை ரயில்வே பணிமனை மற்றும் குடியிருப்புகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.  சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றும் இப்பணிமனை  இந்திய அளவில் உள்ள ரயில்வே பணிமனைகளுள் மிக முக்கியமானது. இங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டால் தடுக்கும் வகையில் பிரத்யேக தீ அணைப்பு நிலையம் இருந்தது.  ஒரு தீயணைப்பு வண்டியுடன் ஒரு ஷிப்டுக்கு 4 பணியாளர்கள் வீதம் ஒரு அதிகாரியும் பணியில் இருந்தனர். மேலும் பணிமனை முழுவதும் தண்ணீர் பாய்ச்சும் குழாயும் பதிக்கப்பட்டிருந்தது.
ஆனால்,  கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்னர் அந்த தீயணைப்பு வாகனம் முறையான பராமரிப்பின்றி பழுதானது.  அதன்பின்னர் வாகனத்தை  பழுது நீக்கம் செய்யவில்லை, புதிதாக வாகனம் வாங்கவும் இல்லை.  
அதன்பிறகு தீயணைப்பு நிலையமே காணாமல் போனது.  பெல் நிறுவனத்துக்கு பிரத்யேக தீயணைப்பு வாகனம் உண்டு. அதுபோல பொன்மலை பணிமனைக்கு மீண்டும் தீயணைப்பு வாகனம் மற்றும் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com