யானை தந்தங்கள் பதுக்கல் இளைஞர் கைது

யானை தந்தங்களை கடத்தி விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த இளைஞரை திருச்சியில் வனத்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

யானை தந்தங்களை கடத்தி விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த இளைஞரை திருச்சியில் வனத்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  கிருஷ்ணகிரி பகுதியிலிருந்து யானை தந்தங்களை கடத்தி, திருச்சியில் கொண்டு வந்து விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டுளளதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருச்சி மண்டல வனப் பாதுகாவலர் வி. திருநாவுக்கரசு, மாவட்ட வன அலுவலர் என். சதீஷ், திருச்சி சரக வனஅலுவலர் ஆர். ரவிகிருஷ்ணன், வனவர் பி. பழனிசாமி, காவலர்கள் கே. திருஞானசம்பந்தம், முருகானந்தம், ரத்தினம், கருணாநிதி உள்ளிட்டோர் ஸ்ரீரங்கம் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
  அப்போது, ஸ்ரீரங்கம் மேலூர் செட்டியார் தோப்பு பகுதியைச் சேர்ந்த க. பிரபு (30) என்பவர் 3 தந்தங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தந்தங்களை பறிமுதல் செய்த வனத் துறையினர் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-இன் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர். பின்னர், திருச்சி மாவட்ட 3-ஆவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
 வெளிச் சந்தையில் பல லட்சம் மதிப்புள்ள தந்தங்கள் ஒவ்வொன்றும் முறையே 94 செ.மீ., 72 செ.மீ., 68 செ.மீ. நீளம் கொண்டதாக இருந்தன. இது தொடர்பாக மேலும் ஒருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com