குடியரசுத் தலைவர் தேர்தலில்  பாரம்பரியத்தை மீறுகிறது பாஜக: காதர்மொய்தீன்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரம்பரியத்தை மீறுகிறது பாஜக என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர்மொய்தீன் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரம்பரியத்தை மீறுகிறது பாஜக என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர்மொய்தீன் தெரிவித்தார்.
  திருச்சி இந்திய யூனியன் முஸ்லிம் லிக் சார்பில் திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் அரசியல், புயலில் சிக்கிய படகு போல அன்றாடம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அரசு எப்போது கவிழும் என்று தெரியாத நிலை உள்ளது. தமிழகத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும், சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும், ஏற்றத்தாழ்வற்ற நிலை வேண்டும் உள்ளிட்டவை தமிழகத்தின் தத்துவம். தமிழகத்தை வழிநடத்தக் கூடியவர்கள் தலைவர்கள் என்பதைவிட, வழிநடத்தும் தத்துவம் எது என்பதுதான் முக்கியம். இதை நிலைநிறுத்திய அண்ணா, காமராஜர், கருணாநிதி ஆகியோர் வழியில் செயல்பட்டு வரும் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தால்தான் இத்தத்துவம் நிலைக்கும்.
 குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து கேட்ட போது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 17 கட்சிகள் ஒன்றுகூடி, பாஜக அறிவிக்கும் வேட்பாளரின் தன்மைகளை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, ஓரிரு தினத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை சோனியா காந்தி அறிவிப்பார்.
 குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு தடவை வடக்கு பகுதியிலிருந்தும், மறுதடவை தெற்குப் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், பாஜக பாரம்பரிய மரபுகளை மீறி வடக்கிலிருந்து ஒருவரை வேட்பாளாராக அறிவித்துள்ளது. பாஜக ஆட்சியில் தொடர்ந்து பாரம்பரிய மரபுகள் மீறப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் குழப்பத்தைப் பயன்படுத்தி, பாஜகவின் கொள்கையை உட்புகுத்த முயற்சித்து வருகின்றனர். ஆனால் இதில் அவர்கள் வெற்றிபெற இயலாது என்றார் அவர்.
 நிகழ்ச்சியில், ஏழை, எளிய மக்களுக்கு ரம்ஜான் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது. இதற்கு, திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் நிஜாம் தலைமை வகித்தார். இதில் திமுகவின் நகரச் செயலாளர் மு. அன்பழகன், மகளிர் அணி ஷாஸ்மினாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com