மாநகரில் குப்பைகளை விரைவாக சேகரிக்க ரூ.2.40 கோடியில் 40 வாகனங்கள்

திருச்சி மாநகரில் அனைத்து இடங்களுக்கும் சிரமமின்றி, விரைவாக சென்று குப்பைகளை சேகரிக்க ஏதுவாக ரூ.2.40 கோடியில் 40 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

திருச்சி மாநகரில் அனைத்து இடங்களுக்கும் சிரமமின்றி, விரைவாக சென்று குப்பைகளை சேகரிக்க ஏதுவாக ரூ.2.40 கோடியில் 40 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் நாளொன்றுக்கு 469 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. இதை குறைக்கும் வகையிலும், மாநகரில் சுற்றுச்சூழலை பாதுக்கும் வகையிலும் மாநகராட்சி நிர்வாகம், துப்புரவுப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து வருகிறது. இதில் மக்கும் குப்பைகள் நுண்உர செயலாக்க மையத்துக்கும், மக்காத குப்பைகள் விற்பனைக்கும் அனுப்பப்படுகின்றன.
இப் பணிகளை மேற்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சாதாரண தள்ளுவண்டிகளும், ஒரு சில 4 சக்கர வாகனங்களும் மட்டுமே பயன்பட்டில் இருந்து வந்தது. இதனால் பல பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்க முடியவில்லை. இதையறிந்த மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை சேகரிக்க ரூ.2.40 கோடியில் புதிதாக 40 நான்கு சக்கர வாகனங்களை வாங்கியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன் கூறியது: மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மக்கும், மக்காத குப்பைகளை விரைவாக சேகரிக்கும் பணியில் 2,000 துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தள்ளுவண்டிகளையே பயன்படுத்துகின்றனர். மேலும், மாநகராட்சி லாரிகள், ஒரு சில நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
இதனால், மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்களுக்கும் தினமும் சென்று குப்பைகளை சேகரிக்க முடியாத நிலை இருந்து வந்தது. இதுதொடர்பாக பொதுமக்களிடமிருந்தும் புகார்களும் வந்தன. இதையடுத்து ரூ.2.40 கோடியில் 40 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் 40 ஓட்டுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 40 வாகனங்களில் குப்பைகளை ஏற்றும் வகையிலான அமைப்பு ஏற்படுத்தி, விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு, ஒலிபெருக்கி வசதிகள் அமைக்கப்பட்ட 2 வாகனங்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. மீதமுள்ள வாகனங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு விடப்படும் என்றார் அவர்.
60 டன் மக்காத குப்பைகள் ரூ.1.70 லட்சத்துக்கு விற்பனை: திருச்சி மாநகராட்சியின் 4 கோட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 195 மையங்களில், மூன்றாவது வாரமாக புதன்கிழமை (ஜூன் 21) 60 டன் மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு, உலர் கழிவு விற்பனையாளர்களிடம் ரூ.1,70,888.50 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்பணம் ஊக்கத்தொகையாக மக்காத குப்பகளை சேகரித்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com