திருச்சி- சேலம் நெடுஞ்சாலையில் அணிவகுத்து நிற்கும் மணல் லாரிகள்; அவதியுறும் வாகன ஓட்டிகள்

திருச்சி- சேலம் நெடுஞ்சாலையில் இருபுறமும் நீண்ட தொலைவுக்கு மணல் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் கடந்த இரண்டு நாள்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும்

திருச்சி- சேலம் நெடுஞ்சாலையில் இருபுறமும் நீண்ட தொலைவுக்கு மணல் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் கடந்த இரண்டு நாள்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் போராட்டக் களத்தில் குதிக்கும்முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் திருச்சி மாவட்டத்தில் மணல் குவாரிகள் அதிகமாக உள்ளது. திருச்சி மாவட்டத்தில் பெருகமணி, திருவளர்ச்சோலை, திருவாசி, முசிறி மற்றும் லால்குடி வட்டத்தில் விரகாலூர் பகுதியிலும் பொதுப்பணித் துறையின் கீழ் மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன. தற்போது, மணல் குவாரிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டதால், தற்போதுள்ள இடத்தில் பல நாள்கள் காத்திருந்து மணல் பெற்றுச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் திருச்சி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்கள் மட்டுமல்லாது, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், தருமபுரி, சேலம், நீலகிரி என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லாரிகளும் தற்போது திருச்சி மாவட்டத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன.
சாலைகளில் அணிவகுத்து நிற்கும் மணல் லாரிகள் : திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவாசி மணல் குவாரியில் மணல் எடுப்பதற்காக முசிறி நோக்கிச் செல்லும் சாலையில் சிறுகாம்பூர் வரையிலும், திருச்சி நோக்கிச் செல்லும் சாலையில் நெ.1 டோல்கேட்டை தாண்டி கொள்ளிடம் புதுப்பாலத்திலும் லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. ஏற்கெனவே, இந்த சாலை மிகவும் குறுகிய அளவைக் கொண்டிருப்பதால் மற்ற வாகனங்களில் செல்வோர் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வாகனங்கள் காலை நேரங்களில் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. காலை மற்றும் மாலை நேரங்களில் வழக்கமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலோடு வரிசைக்கட்டி நிற்கும் லாரிகளால் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. ஆனால் லாரி ஓட்டுநர்கள் இதை பற்றியெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கிடைக்கும் இடங்களில் எல்லாம் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளதால் இரவு நேரத்தில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர குவாரியிலிருந்து மணல் ஏற்றி வரும் லாரிகள் பல அதிவேகமாக இயக்கப்படுவதால் பல நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் கூட நிகழ்கின்றன.
இந்த விஷயத்தில் பொதுமக்கள் வெகுண்டு எழுந்து போராட்ட களத்தில் இறங்கும்முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்த லாரிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லாரிகளை நிறுத்த தனி இடம் தேவை: ஏற்கெனவே மணல் குவாரிகளில் மணல் வழங்கும் போது, லாரிகளை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தகி வைத்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனுப்பியது போன்று, குவாரிக்குஅருகில் உள்ள பகுதியைத்தேர்வு செய்து அங்கிருந்து அனுப்பினால்தான் மணல் லாரிகள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்கின்றனர் பொதுமக்கள்.
கரூர் சாலையிலும்...

திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையைப் போன்று திருச்சி- கரூர் சாலையிலும் பெருகமணி பகுதியிலுள்ள மணல் குவாரியின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கரூர்,கோவை, ஈரோடு, திருப்பூர் போனற மாவட்டங்களிலிருந்தும், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற பகுதிகளிலிருந்து செல்லும் லாரிகள் ஒரே நேரத்தில் இந்த சாலையில் குவிவதால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
பேட்டைவாய்த்தலையிலிருந்து குளித்தலையை 15 நிமிஷங்களில் சென்றடையலாம். ஆனால் கரூர் சாலையில் வரிசையாக நிற்கும் லாரிகளால் பேருந்துகளும், இதர வாகனங்களும் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளதால், குறைந்தது 45 நிமிஷங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகிறது. குளித்தலையில் புறவழிச்சாலையில் இரு பகுதிகளிலும் மணல் லாரிகள் வரிசையாக நிற்கின்றன. பெருகமணியில் மணல் குவாரியில் அமைந்துள்ள பகுதிக்கு முன்பே தொடங்கும் போக்குவரத்து நெரிசல் குளித்தலை வரை நீடிப்பதால் இந்த வழியாகச் செல்லும் வாகனங்களும், பொதுமக்களும் சொல்ல முடியாத அளவிற்கு சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com