திருச்சி மாவட்டத்தில் கட்டுக்குள் இளம்வயது திருமணங்கள்

திருச்சி மாவட்டத்தில் இளம்வயது திருமணங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார் சைல்டுலைன் நோடல் ஏஜென்சியின் திட்ட இயக்குநர் முனைவர் காட்வின் பிரேம்சிங்.

திருச்சி மாவட்டத்தில் இளம்வயது திருமணங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார் சைல்டுலைன் நோடல் ஏஜென்சியின் திட்ட இயக்குநர் முனைவர் காட்வின் பிரேம்சிங்.
திருச்சி மாவட்டத்தில் சைல்டுலைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
திருச்சி மாவட்டத்தில் 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சைல்டுலைன் திட்டம், கைவிடப்பட்ட சிறுவர்களை அடையாளம் கண்டு மருத்துவம், உணவு, உறைவிடம் வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் கொடுமை, இளம்வயது திருமணம், உடல்ரீதியாக இழைக்கப்படும் கொடுமை, குழந்தைத் தொழிலாளர், குழந்தைப் பருவத்திலேயே பிச்சை எடுப்போர், பள்ளியிலிருந்து இடைநிற்றல் போன்ற முக்கிய பிரச்னைகளில் சைல்டுலைன் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்றி வருகிறது.
பள்ளிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பாதுகாப்பான இடம் இல்லாமல் வரும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 2015-16-ம் ஆண்டில் மாவட்டத்தில் 57 இளம்வயது திருமணங்கள் தடுக்கப்பட்ட நிலையில், 2016-17 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 53 ஆக குறைந்துள்ளது. இதில் ஒருசில குழந்தைகளைத் தவிர மற்ற குழந்தைகள் பாதுகாப்புக்காக கல்விகற்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், துறையூர், மணப்பாறை, மருங்காபுரி வட்டாரங்களில்தான் இளம்வயது திருமணத்துக்கான நடவடிக்கைகள் அதிக அளவில் உள்ளன. பள்ளி இடைநிற்றல்,
வேலைக்குச் செல்லும்போது காதல் வயப்படுதல் போன்ற காரணங்களால் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பெற்றோர் தங்களின் இளம்வயது பெண்களுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சிக்கின்றனர்.கிராம சுகாதார செவிலியர்கள், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், காவல் துறையினர், ஆசிரியர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பயிற்சி அளித்து வருகிறோம்.ஏப்ரல் 2016- மார்ச் 2017 வரையிலான காலத்தில் 53 இளம்வயது திருமணங்களைத் தடுத்துள்ளோம். 38 குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 21 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். பள்ளியிலிருந்து இடைநின்ற 16 பேரை உடனடியாக பள்ளியில் சேர்த்துள்ளோம்.
உடல்ரீதியான தொந்தரவால் பாதிக்கப்பட்ட 3 பேரையும், குழந்தைகளுக்கான பாலியல் தொந்தரவிலிருந்து 4 பேரையும் நாங்கள் மீட்டுள்ளோம் என்றார் காட்வின் பிரேம்சிங்.பேட்டியின்போது, கல்லூரி முதல்வர் டி. பால்தயாபரன், சைல்டுலைன் நகர ஒருங்கிணைப்பாளர் எஸ். தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com