தொட்டியம் அருகே லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல்

தொட்டியம் அருகே மணல் குவாரிகள் மணல் அள்ள உள்ளூர் லாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக மணல் லாரி ஓட்டுநர்கள் புதன்கிழமை சாலை

தொட்டியம் அருகே மணல் குவாரிகள் மணல் அள்ள உள்ளூர் லாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக மணல் லாரி ஓட்டுநர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் அப்பகுதி பொதுமக்கள் குவாரியில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடிநீர் மட்டம் குறைவதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொட்டியம் அருகேயுள்ள சீலைப்பிள்ளையார்புத்தூரில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மணல் குவாரியினால் அப்பகுதியில் நிலத்தடிநீர் குறைந்து வருவதாகவும், இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறி அப்பகுதியில் உள்ள மணல் குவாரியிலிருந்து மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதேபோல இப்பகுதியில் இயங்கி வரும் மணல் குவாரியில் மணல் ஏற்ற கருர், நாமக்கல், திருச்சி, ஈரோடு மற்றும் வெளியூர்களில் இருந்து கடந்த மே 13 ஆம் தேதி வந்த 100-க்கும் மேறப்பட்ட மணல் லாரிகளுக்கு மணல் வழங்கப்படவில்லை எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சில குறிப்பிட்ட உள்ளூர், வெளியூர் பகுதி லாரிகளுக்கு கமிஷன் பெற்று மணல் வழங்க முயற்சிப்பதாகவும், 10 நாள்களுக்கு மேலாக காத்திருக்கும் தங்களது லாரிகளுக்கு மணல் வழங்க முன்அனுமதிச் சீட்டு வழங்க தாமதிப்பதாகவும் கூறி மறியலுக்கு முயன்றனர்.
தகவலறிந்து வந்த காட்டுப்புத்தூர் போலீஸார் பொதுமக்கள் மற்றும் லாரி ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
திருஈங்கோய்மலையில்.......
மணமேடு பகுதியில் ஜூன் 19 வரை மணல் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால் மணமேடு ஊராட்சிக்கு உட்பட்ட காவிரி ஆற்றில் மணல் எடுத்துகொண்டு முள்ளிப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட திருஈங்கோய்மலையில் மணல் லாரிகள் வெளியேறி வருவதாகவும் மேலும் முன்அனுமதி சீட்டு வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும் கூறி பொதுமக்கள், உள்ளூர் லாரி உரிமையாளர்கள் குவாரிக்குள் மணல் ஏற்ற சென்ற லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த தொட்டியம் போலீஸார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது கோரிக்கைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com