வாழைத்தார்களை பழுக்கவைக்க, குளிர்வித்து விற்பனை செய்ய புதிய வசதி

திருச்சி அருகே வாழைத்தார்களை பழுக்க வைக்கவும், குளிர்வித்து விற்பனை செய்யவும் புதிய வசதியை கூட்டுறவுத் துறை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே வாழைத்தார்களை பழுக்க வைக்கவும், குளிர்வித்து விற்பனை செய்யவும் புதிய வசதியை கூட்டுறவுத் துறை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்து பயிரிடப்படும் பயிராக விளங்கி வருவது வாழை. அவ்வாறு பயிரிடப்படும் வாழைகளை முழுமையாக அறுவடை செய்து முழுத் தொகையை பெற இயலாத நிலையில்தான் விவசாயிகள் உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் வழக்கமாக 8,300 ஹெக்டேரில் வாழை பயிரிடப்பட்டு வந்தது. ஆனால், வறட்சியின் காரணமாக கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 6000 ஹெக்டேரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது.
வறட்சிக் காரணமாக வாழைகள் காய்ந்து கருகுதல் அல்லது சூறாவளிக் காற்று, பலத்த மழையால் சேதமடைதல் என இயற்கை பாதிப்புகளால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள், வாழையைப் பயிரிட்டு முழுமையான பலன் பெற்ற நிலை மாறி பல ஆண்டுகளாகிவிட்டது.
தாங்கள் பயிரிடும் வாழைகளை அறுவடைக்குப் பின்னர் காந்தி மார்க்கெட்டுக்கு அனுப்பியோ அல்லது கேரள மாநிலத்துக்கோ வாழைத்தார்களை அனுப்பி, ஏலம் மூலம் கிடைக்கும் தொகையைப் பெற்று வந்தனர். இந்த நிலையில், வாழை பயிரிடும் விவசாயிகளுக்கு பலன்தரும் வகையில், விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ப தேவையான நேரங்களில் வாழைத்தார்களை பழுக்க வைத்து விற்பனை செய்து கொள்ளும்  வகையில்  திருச்சி அருகே குளிர் சேமிப்பு கிடங்கு மற்றும் வாழைத்தார் பழுக்க வைக்கும் மையத்தை அமைத்திருக்கிறது கூட்டுறவுத் துறை.
நபார்டு வங்கியின் ரூ. 41.8 லட்சம் நிதியுதவியுடன் ரூ. 46.4 லட்சம் மதிப்பில் தலா 5 டன்திறன் கொண்ட குளிரூட்டும் நிலையம்,  வாழைத்தார் பழுக்க வைக்கும் மையத்தை திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகிலுள்ள நாச்சிக்குறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்சங்க வளாகத்தில் அமைத்திருக்கிறது கூட்டுறவுத் துறை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது இந்த மையம்.
முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட வாழை பழுக்க வைக்கும் அறையில் எத்தனால் கலந்த ஸ்பிரேயர் வைக்கப்பட்டிருக்கும். இந்த அறையில் வைக்கப்படும் வாழைத்தார்கள் 12 மணி நேரத்துக்குள் அறையின் வெப்பநிலை காரணமாக பழுக்கும் நிலையை அடையும்.  இந்த அறை முழுவதும் எத்தனால் வாயு இருப்பதால், வாழைத்தார்கள் பழுக்கக்கூடிய நிலையை எளிதாக அடையும். இந்த அறை 16 டிகிரி செல்சியஸ் நிலையில் இருக்கும்.  மூடிய நிலையில் வைக்கப்படும் வாழைத்தார்கள் 12 மணி நேரத்துக்குள் பழுக்கும் நிலையை அடைந்தவுடன், அடுத்த 12 மணி நேரம் முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறையில் திறந்து வைக்கப்படும். விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ப தேவையான நேரங்களில் வாழைத்தார்களை பழுக்க வைத்து விற்பனை செய்து கொள்ளலாம். விவசாயிகளுக்குப் பயன் உள்ளது:  வாழைத்தார்களின் விலை குறைவாக விற்பனை ஆகும் சமயங்களில் , அதை விற்பனை செய்ய மனமில்லாமல் இருக்கும் விவசாயிகள், தங்களிடம் உள்ள வாழைத்தார்களை இங்குள்ள குளிர் சேமிப்புக் கிடங்கில் வைத்து, விலை அதிகமான காலத்தில் விற்பனைசெய்து கொள்ளலாம். திருமண முகூர்த்த காலம் போன்ற தேவை அதிகமான காலங்களில் வியாபாரிகள் இங்கு வைத்து, தேவைக்கேற்ப விற்பனை செய்து பயன்பெறலாம் என்றார் திருச்சி மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கே.சி.ரவிச்சந்திரன்.

காய்கறிகளையும் குளிரூட்டி வைக்கும் வாய்ப்பு
வாழைத்தார்கள் மட்டுமல்லாது, பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளுக்கு வழங்குவதற்காக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளையும் இங்கு வைத்து, குளிரூட்டப்பட்ட பின்னர் கடைகளுக்கு அனுப்பி வைக்கிறோம். இதனால்  காய்கறிகள் பசுமை மாறாமல், அறுவடை செய்த நிலையிலேயே பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
உய்யக்கொண்டான்திருமலை, நாச்சிக்குறிச்சி, மல்லியம்பத்து போன்ற சுற்றுப்புற விவசாயிகளுக்கு இந்த குளிர் சேமிப்பு கிடங்கு மற்றும் வாழைத்தார் பழுக்க வைக்கும் மையம் பெரும் பயனளிக்கும். மற்ற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகளும் இம்மையத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
1 கிலோவுக்கு ரூ. 1.25 முறையில் கட்டணம் வசூலித்த நிலையில், விவசாயிகளின் நலன் கருதி கிலோவுக்கு 75 பைசா மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறோம் என்கிறார் திருச்சி மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கே.சி. ரவிச்சந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com