ரூ. 50 கோடியிலான மேம்பாலம், சாலைப் பணிகள் ஆய்வு

நெடுஞ்சாலைத் துறை சார்பில், மண்ணச்சநல்லூர், முசிறி, திருவானைக்கா பகுதிகளில் ரூ.50 கோடியில் கட்டப்படும் மேம்பாலம், சாலைப் பணிகளை ஆட்சியர் கு. ராசாமணி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

நெடுஞ்சாலைத் துறை சார்பில், மண்ணச்சநல்லூர், முசிறி, திருவானைக்கா பகுதிகளில் ரூ.50 கோடியில் கட்டப்படும் மேம்பாலம், சாலைப் பணிகளை ஆட்சியர் கு. ராசாமணி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
சென்னை - திருச்சி-திண்டுக்கல் சாலையில் திருவானைக்கா பகுதியில் உள்ள பழமையான ரயில்வே பாலத்துக்குப் பதிலாக ரூ. 43 கோடியில் புதிய நான்குவழி சாலை மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த மேம்பாலம் சென்னை-திருச்சி சாலையில் நான்கு வழித்தடமாகவும், கல்லணை மார்க்கத்தில் மூன்று வழித்தட இணைப்புப் பாலமாகவும் அமைக்கப்படுகிறது. இப் பாலப் பணிகள் 75 சதவீதம் நிறைவுற்றுள்ளன. இதைப் பார்வையிட்ட ஆட்சியர், 4 மாதங்களில் மீதமுள்ள பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.
இதேபோல,திருச்சி - துறையூர் சாலையில் நொச்சியம் முதல் மண்ணச்சநல்லூர் வரையுள்ள சாலைப்பகுதியில் குறுகிய பாலங்களை அகலப்படுத்துதல், புதிய பாலம் மற்றும் சிறுபாலங்கள் கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
பங்குனி வாய்க்காலின் குறுக்கே ரூ. 1.70 கோடியில் சிறுபாலம் மற்றும் கல்வெர்ட் கட்டும் பணியில் பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் முடிந்துள்ளன. அணுகு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
பெருவளைவாய்க்காலின் குறுக்கே ரூ.1.45 கோடியில் கட்டப்படும் சிறுபாலத்தில் 3 மேல்தளங்களில் 2 தளங்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது. மீதமுள்ள தளமும் விரைவாக அமைக்கப்படுகிறது. புள்ளம்பாடி வாய்க்காலின் குறுக்கே ரூ.1 கோடியில் சிறுபாலம் கட்டும் பணி முடிவுறும் நிலையில் உள்ளது. நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்திட்டத்தின் கீழ், தண்டலைப்புதூர்-திண்ணக்கோணம் பாலம் அமைக்கும் பணி ரூ.3 கோடியில் நடைபெறுகிறது.
இப் பணிகளைப் பார்வையிட்ட ஆட்சியர், பாலத்தை தரமாக கட்டமைப்பதுடன் குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் அறிவுறுத்தினார். கோட்டப் பொறியாளர்கள் கிருஷ்ணசாமி, லட்சுமிநாதன், உதவி கோட்டப் பொறியாளர்கள் ரங்கவேல், விவேகானந்தன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com