வெடிமருந்து ஆலைக்கு எதிராக போராடியவர்களை விடுவிக்கக் கோரி திருச்சி அருகே கடையடைப்பு, கருப்புக் கொடி போராட்டம்

திருச்சி மாவட்டம், த. முருங்கப்பட்டியில்  மூடப்பட்ட வெடிமருந்து ஆலையை திறக்கும் நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

திருச்சி மாவட்டம், த. முருங்கப்பட்டியில்  மூடப்பட்ட வெடிமருந்து ஆலையை திறக்கும் நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து   கடையடைப்பு, கருப்புக்கொடி போராட்டம், ஆட்சியர் அலுவலகம் முற்றுகை என கிராம மக்கள் திங்கள்கிழமை  தொடர் போராட்டங்களை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
துறையூர் வட்டத்துக்குள்பட்ட த.முருங்கப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியார் வெடிமருந்து ஆலையில், 2016,டிசம்பர் 1 ஆம் தேதி நிகழ்ந்த வெடிவிபத்தில் 19 பேர்உயிரிழந்தனர்.  15 பேர் காயமடைந்தனர். இதையடுத்து இந்த ஆலை மூடப்பட்டது. மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இந்தநிலையில், கடந்த சில நாள்களாக ஆலையைத்  திறக்கும்வகையில் கட்டுமானப் பொருள்கள் கொண்டுவருவது நடைபெற்றது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் கடந்த 4ஆம் தேதி ஆலைக்கு பொருள்கள் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள், லாரி ஓட்டுநர் தரப்பில் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் தனித்தனியே புகார் செய்யப்பட்டாலும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.  இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முசிறி டி.எஸ்.பி பாலமுருகன், துறையூர் காவல் ஆய்வாளர் மனோகரன் மற்றும் போலீஸார் முருங்கப்பட்டி கிராமத்துக்குள் நுழைந்து வீடு, வீடாக சோதனையிட்டனர்.
இதைத் தொடர்ந்து ஊராட்சி முன்னாள் தலைவர் பெரியசாமி (52), நடராஜன் (56), அப்பாதுரை (56), பழனியப்பன் (58), ஆனந்தன் (40), சரவணன் (35), புகழேந்தி (45) ஆகிய 7 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர். தகவலறிந்து திரண்ட
 கிராமமக்கள் நள்ளிரவிலேயே உப்பிலியபுரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கிராமத்தில் கருப்புக்கொடி ஏற்றினர். கடைகள் அனைத்தையும் மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதுசெய்யப்பட்ட அனைவரும் முசிறி காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து துறையூர் நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை காலை அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களுடன் தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பொ. அய்யாக்கண்ணுவும் வந்திருந்தார். ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர். ஆட்சியரும் மாவட்டக் காவல்கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அறிவுறுத்தினார். ஆனால், வழக்குப்பதிவு செய்துவிட்டதால் நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிடுவோம் என போலீஸார் தெரிவித்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த கிராமமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆட்சியர் கார் நிறுத்தும் பகுதிக்கு வந்து தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் உதவி ஆணையர் சச்சிதானந்தம் தலைமையிலான போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கைது செய்யபட்டவர்களை பிணையில் எடுக்க மனு செய்தால், காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம். பிணை பெற்று விடுவித்துக் கொள்ளுமாறு கூறினர். இதனையேற்று போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
இதுதொடர்பாக, கிராம மக்களின் சார்பில் வழக்குரைஞர் எஸ்.முத்துக்கிருஷ்ணன் கூறியது:
மூடப்பட்ட ஆலையை திறக்க முயற்சி நடப்பதாக அறிந்து லாரியை மறித்து போராட்டம் நடத்திய மக்கள் மீது 147, 148, 323, 506 (2) உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், நாங்கள் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. நள்ளிரவில் வீடு புகுந்து அரை நிர்வாணத்துடன் அனைவரையும் அழைத்துச் சென்றுள்ளனர். காவல்துறையினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக, சட்டரீதியாக வழக்குத்தொடருவோம் என்றார் அவர்.
இந்த சம்பவம், காரணமாக முருங்கப்பட்டி மற்றும் துறையூர் வட்டத்திலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடங்கி திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி வரை பரபரப்பு நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com