திருச்சி ஹோட்டலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: வழக்குரைஞர் சங்கத் தலைவர் உள்பட இருவர் கைது

திருச்சி ஹோட்டலில் வெடிகுண்டு வீசிய வழக்கு தொடர்பாக குற்றவியல் திருச்சி வழக்குரைஞர் சங்கத் தலைவர் உள்பட இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனர்.

திருச்சி ஹோட்டலில் வெடிகுண்டு வீசிய வழக்கு தொடர்பாக குற்றவியல் திருச்சி வழக்குரைஞர் சங்கத் தலைவர் உள்பட இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனர்.
திருச்சி கண்டோன்மென்ட் ஸ்டேட் வங்கி காலனியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர், ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே பாரதியார் சாலையில் விடுதியுடன் கூடிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.
இங்கு வெள்ளிக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், ஹோட்டலின் முன்பகுதியில் வெடிகுண்டை வீசிவிட்டு தப்பினர். இதனால் ஹோட்டலின் வரவேற்பறை கண்ணாடிகள் உடைந்தது. யாருக்கும் காயமில்லை.
தகவலறிந்த மாநகர துணை ஆணையர் எஸ். சக்தி கணேசன் தலைமையிலான போலீஸார், வெடிகுண்டு நிபுணர்களின் துணையுடன் விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் மகேஷ், கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் அளித்த புகார் விவரம்: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், என் மூலமாக திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்த நிதிநிறுவன அதிபர் கருப்பையாவிடமிருந்து ரூ. 14 கோடி கடன் வாங்கினார். ராஜேஷ் கடனை அடைக்க முடியாததால், பணத்துக்கு பதிலாக கொடைக்கானலில் இருந்த அவரது இடத்தை கருப்பையாவுக்கு கொடுத்து கடனை சரி செய்து கொண்டார். இந்நிலையில் ராஜேஷ் வாங்கிய கடனுக்கான வட்டி பணத்தை என்னிடம் கேட்டு, கருப்பையா கடந்த பிப்ரவரி மாதம் முதல் என்னை மிரட்டி வந்தார்.
இதனிடையே, கருப்பையாவிடம், ராஜேஷுக்கு பணம் வாங்கி கொடுத்த போது, எனது பாதுகாப்புக்காக ராஜேஷிடம் வாங்கி வைத்திருந்த சில ஆவணங்களை கேட்டும், கருப்பையாவிடம் வாங்கிய தொகைக்கான வட்டியை கட்ட வலியுறுத்தியும் திருச்சி குற்றவியல் வழக்குரைஞர் சங்கத் தலைவர் ராஜேந்திரகுமாரும், கடன்பெற்ற ராஜேஷும் அடிக்கடி என்னை மிரட்டினர். வழக்குரைஞர் ராஜேந்திரகுமார், ஹோட்டலை தரைமட்டமாக்கிவிடுவேன் என்று மிரட்டினார். இந்நிலையில் எனது ஹோட்டலில் வெடிகுண்டு வீசிச் சென்றுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குப் பதிவு...: இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸார், 294(பி), 436, 506 (1), பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் தடை சட்டம் 1992-இல் பிரிவு 3, வெடிபொருள்கள் தடை சட்டம் 1908-இல் பிரிவு 4(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, வழக்குரைஞர் ராஜேந்திரகுமார் (44), ராஜேஷ் (32) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.
போராட்டம்...: இதையறிந்த வழக்குரைஞர்கள் சிலர், கண்டோன்மென்ட் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, வழக்குரைஞர் ராஜேந்திரகுமாரை விடுவிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அக். 12-ஆம் தேதி வரை காவல்...: இதையடுத்து போலீஸார், காஜாமலையில் உள்ள திருச்சி 3-ஆவது குற்றவியல் நடுவர் ரெஹானா பேகம் வீட்டில், இருவரையும் நேரில் ஆஜர்படுத்தினர். அவர், இருவரையும் அக்டோபர் 12-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மேற்கண்ட இருவரையும், போலீஸார் திருச்சி மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை இரவு அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com