உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் விதிமீறல்கள்: முறையான விசாரணை நடத்த பாஜக வலியுறுத்தல்

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு நடைபெற்ற உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து முறையாக விசாரிக்கப்பட

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு நடைபெற்ற உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றார் பாஜக  மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
மயிலாடுதுறையில் நடைபெறும் பொதுக்கூட்ட  நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பாஜக பல்வேறு இயக்கங்களை சார்ந்துள்ளது. இன்றைய சூழலில்  மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கு இணக்கமான மாநில அரசு தேவை. அந்த வகையில் மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு வரவே இணக்கமாக உள்ளது. அதே நேரம் மாநில அரசு செய்யும் தவறுகளையும் சுட்டிக்காட்ட பாஜக தவறுவதில்லை.  
அந்த வகையில்தான்,  நடராஜனுக்கு மேற்கொண்ட உறுப்பு மாற்ற அறுவைச் சிகிச்சையில் விதிமீறல்கள் நடந்துள்ளன என்பதையும் பாஜக சுட்டிக்காட்டுகின்றது.  பல தனியார்  மருத்துவமனைகள் வியாபார நோக்கோடு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்வதாகவே தோன்றுகின்றது. எனவே, ஏழைகளுக்கு கிடைக்கவேண்டிய பயன்கள் கிடைக்காமல் போகிறது. உறுப்பு தானம் செய்த நபருக்கு உண்மையில் மூளைச்சாவு ஏற்பட்டதா?  ஏன் அவர் சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்? ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர்களுக்கு  அதற்கான செலவுகளை செய்தது யார் ?  என அடுக்கான கேள்விகள் எழுகிறது. அரசு மருத்துவமனைகளில் ஏன் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்வதில்லை?
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.  தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் அதிகமாக இருப்பதால் பெண் ஒருவர் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அண்டை மாநிலத்தில் விபத்தில் பாதிக்கப்பட்ட வருக்கு சிகிச்சை அளிக்காததால் கால் துண்டிக்கப்
பட்டுள்ளது.
இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.  அரசியல் கட்சிகள் ஏதாவது சம்பவத்தை முன்னிலைப்படுத்தி  போராடுவதை விடுத்து ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்காக போராட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com