திருச்சி, கும்பகோணம், அறந்தாங்கியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

திருச்சி, ஸ்ரீரங்கம், கும்பகோணம், அறந்தாங்கியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுலவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை சோதனை நடத்தினர்.

திருச்சி, ஸ்ரீரங்கம், கும்பகோணம், அறந்தாங்கியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுலவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை மாலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ராமசந்திரன், ஆய்வாளர் சேவியர் ராணி, ஆய்வுக்குழு ஆய்வாளர் பாலு ஆகியோர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு இருந்த 5 இடைத்தரகர்கள் மற்றும் நிரந்தர ஊழியர்களிடம் அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு ரொக்கப் பணத்தை சரிபார்த்த போது கணக்கில் வராத ரூ. 1, 03,120 ஐ  லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் திருச்சி கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான போலீஸார்  சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை புதன்கிழமை இரவு வரை நீடித்தது. இதில், கணக்கில் வராத ரூ. 43ஆயிரம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த தென்னூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்  புதன்கிழமை மதியம் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் ஆய்வுக்குழு அதிகாரி மகேஸ்வரன் மற்றும் லஞ்சம், ஊழல் தடுப்பு டிஎஸ்பி ராமதாஸ் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது, அலுவலகத்தின் கதவுகளைஅடைத்து யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.   இதனால் உரிமம் புதுப்பிக்க வந்தோர், புதிதாக உரிமம் எடுக்க வந்தோர் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து, டி.எஸ்.பி. ராமதாஸ் கூறுகையில், கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்  நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 15 ஆயிரம் பணமும்,  ஒரு மூட்டை ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.
அறந்தாங்கி:  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் அதிகளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்களிடமிருந்து வந்த தகவலின்அடிப்படையில்,  புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில்  ஆய்வாளர்கள் சார்லஸ் மற்றும் பங்கஜம் உள்ளிட்ட 7 போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனை நடைபெற்றபோது,  அலுவலக மாடியிலிருந்து கீழே வீசி எறியப்பட்ட ரூபாய் நோட்டுகளை போலீஸார் கைப்பற்றினர். இதனால், அலுவலகத்தின் கதவு, ஜன்னல்களை போலீஸார் மூடிவிட்டு சோதனை மேற்கொண்டனர்.  மேலும், வாகன பதிவுக்கு வந்தவர்கள்,  வாகன விற்பனையக உரிமையாளர்கள் உள்ளிட்டோர் அலுவலகத்திலிருந்து வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது.
ரூ. 1.35லட்சம் பறிமுதல்:  அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில்  ஆய்வாளர்கள் சார்லஸ் மற்றும் பங்கஜம் உள்ளிட்ட 7 பேர் 7 மணி நேரம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1லட்சத்து 35 ஆயிரம் ரொக்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
திண்டுக்கல்:    திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு  புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர். மேலும், அனைத்துப் பகுதியிலும் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அலுவலகத்தில் உள்ள பீரோவுக்கு பின்புறம், கோப்புகள் வைக்க பயன்படும் ரேக்குகளுக்கு இடையில்,  அடியில், அலுவலக மாடியில் என பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் மீட்கப்பட்டது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கூறுகையில், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறைகேடாக பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாகவும், அந்த பணம் உரிமம் பெற்றுக் கொடுக்கும் முகவர்கள் மூலம் பெறப்படுவதாகவும் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், அலுவலகத்தில் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2,10,405 பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, அலுவலக தலைமை அலுவலர் என்ற முறையில் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மூலம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றனர்.
ராமநாதபுரம்:  ராமநாதபுரம் பாரதிநகரில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு அருகிலேயே வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்பு  காவல் ஆய்வாளர்கள் ஜானகி,விமலா ஆகியோர் தலைமையிலான குழுவினர் திடீரென சோதனை நடத்தினர்.  
அப்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார் வெளியில் சென்றிருந்தார். அங்கு பணியில் இருந்த வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் விஸ்வநாதன், அலுவலக கண்காணிப்பாளர் கோபிராஜன் ஆகியோரிம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள், முகவர்களாக செயல்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் சிலரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையில்  கணக்கில் காட்டப்படாத ரூ. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


சோதனையில் சிக்கியது எவ்வளவு?
ஸ்ரீரங்கத்தில்    ரூ. 1, 03,120
திருச்சி கிழக்கு     ரூ. 43,000
கும்பகோணத்தை அடுத்த தென்னூரில்    ரூ. 15, 000
அறந்தாங்கியில்     ரூ. 1,35,000
திண்டுக்கல்    ரூ.2,10,405
ராமநாதபுரம்    ரூ. 50,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com