எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைத் தவிர்த்து டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவேண்டும்: கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சி தலைவர்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரன்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி :
டெங்கு காய்ச்சலால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சுற்றுப்புறத் தூய்மை பேணாத பள்ளிகளுக்கு அபராதம் விதிப்பதன் மூலம் டெங்குவை ஒழித்துவிட முடியாது. கேரளத்தைப்போல தமிழக அரசும், அமைச்சர்களும் மற்ற வேலைகளை ஒதுக்கி  வைத்துவிட்டு போர்க்கால அடிப்டையில் செயல்பட்டால் மட்டுமே டெங்குவைக் கட்டுப்படுத்த முடியும். தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்துவதிலும் தவறில்லை.
டெங்கு அதிகரித்து வரும் நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒத்திவைத்து டெங்கு ஒழிப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும். கொங்கு மண்டலம் சிறு, குறு ஜவுளி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. எனவே பல்வேறு மாவட்ட  மக்களும் இங்கு வந்து செல்கின்றனர். இதனால் கொங்கு மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்ற கொங்கு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். காவிரியில் தண்ணீர் திறந்தாலும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டால் மட்டுமே அவர்கள் உழவுப் பணிகளை மேற்கொள்ள முடியும். எனவே தமிழக அரசு விவசாயிகளுக்கு தேவையான பயிர்க் கடன்களை வழங்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com