திருச்சியில் டிடிவி தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு

திருச்சி உழவர் சந்தை திடலில் அதிமுக துணைப் பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி உழவர் சந்தை திடலில் அதிமுக துணைப் பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்ட அதிமுக(அம்மா அணி) செயலர் ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த மனு: அதிமுக(அம்மா அணி) சார்பில் துணைப் பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் தலைமையில் செப்டம்பர்16 ஆம் தேதி நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி திருச்சி உழவர் சந்தைத் திடலில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக அனுமதி கோரி போலீஸாரிடம் மனு செய்தோம். ஆனால், அன்றைய தினம் தேசிய சிறுபான்மைக் கழகம் சார்பில் விழா நடத்த அனுமதி வழங்கியிருப்பதாக கூறி எங்களுக்கு அனுமதி மறுத்தனர்.
இதனால் எங்களது பொதுக்கூட்டத்தை செப்டம்பர் 19 ஆம் தேதி நடத்த அனுமதி வழங்கக்கோரி மனு அளித்தும், இதுவரை எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே திருச்சி உழவர் சந்தைத் திடலில் செப்.19 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, திருச்சி மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் ஆஜராகி வாதிடுகையில், பொதுக்கூட்டம் நடத்த மனுதாரர் அனுமதி கோரியுள்ள இடத்தில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு அரசியல் கட்சி அலுவலகங்களும் உள்ளன. காவிரி மகா புஷ்கர விழாவும் அருகில் நடைபெறுகிறது. எனவே அங்கு அனுமதி வழங்கினால் போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, பல அரசியல் கட்சிகள் ஏற்கெனவே அங்கு கூட்டம் நடத்தியுள்ளன. இந்நிலையில் மனுதாரருக்கு மட்டும் அங்கு அனுமதி மறுப்பது முறையல்ல என்று கூறி டி.டி.வி.தினகரன் திருச்சி உழவர் சந்தைத் திடலில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com