செப்.30-க்குள் மேட்டூர் அணையை திறக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்

பருவமழை தொடங்கும் முன்பு நேரடி விதைப்புக்கு மேட்டூர் அணையிலிருந்து செப். 30-க்குள் பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்றார்

பருவமழை தொடங்கும் முன்பு நேரடி விதைப்புக்கு மேட்டூர் அணையிலிருந்து செப். 30-க்குள் பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்றார் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்.
திருச்சியில் பொதுப்பணித் துறை முதன்மை பொறியாளர் ரவிச்சந்திரனை புதன்கிழமை சந்தித்து மேட்டூர் அணையைத் திறக்க வலியுறுத்தி மனு அளித்த  பின், அவர் அளித்த பேட்டி:
காவிரி டெல்டா  மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் மழையால் பெரும்பகுதியான நிலங்களில் கோடை உழவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  ஒரு சில பகுதிகளில் நேரடி விதைப்பு நடைபெற்று வருகிறது. கிணற்றுப் பாசனம் மூலமும் விதை விடும் பணிகள் தொடங்கியுள்ளன. அக். 20 ஆம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு நேரடி விதைப்புக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை முடிக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு,  செப். 30-க்குள் மேட்டூர் அணையைத் திறக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். அக். 1 முதல் 15 வரை 25,000 கன அடி தண்ணீரை விடுவிக்க வேண்டும்.  மேலும் காவிரி வடிநிலப் பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை உடனே நிறுத்த வேண்டும். ஆறுகள், வாய்க்கால்கள் தூர் வாரப்படாததால், மேட்டூரில் திறக்கும் தண்ணீர் பாசனப் பகுதிகளுக்கு சென்றடையுமா என்ற அச்சமும் உள்ளது.நபார்டு வங்கி குடிமராமத்து பணிகளுக்கு  ரூ. 400 கோடி வழங்க முன் வந்தது. ஆனால், தமிழக அரசு உரிய வழிகாட்டு முறைகளைப் பின்பற்றாததாலும், வெளிப்படையாக செயல்பட மறுத்ததாலும் பணிகள் நடைபெறாமல் தடைபட்டுள்ளது என்றார் பாண்டியன். தஞ்சை மண்டலத் தலைவர் டி.பி.கே.ராஜேந்திரன், திருச்சிமாவட்ட நிர்வாகிகள்  ஹேமநாதன், பாரூக், திருவாரூர் குருசாமி மோகன், அருண், அன்பழகன் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com