இளைஞர்களால் சமூக ஒற்றுமை, நல்லிணக்கம் நிலவ வேண்டும்

சமூக ஒற்றுமை,  நல்லிணக்கத்துக்காக இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்றார் இந்திய கலாசார உறவுகள் மையத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான   வினய் சகஸ்ரபுத்தே.

சமூக ஒற்றுமை,  நல்லிணக்கத்துக்காக இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்றார் இந்திய கலாசார உறவுகள் மையத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான   வினய் சகஸ்ரபுத்தே.
தமிழ்நாடு இளம் சிந்தனையாளர்கள் மன்றம் ,  டாக்டர் கே. காளமேகம் இந்திய கலாசார மற்றும் பாரம்பரியக் கல்வி மையம் மற்றும் தேசியக் கல்லூரி ஆகியவை இணைந்து திங்கள்கிழமை நடத்திய சமுதாய ஒருமைப்பாட்டுக்கான கருத்தரங்கம் மற்றும்  ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளம் சாதனையாளர்களுக்கான  விருது வழங்கும் விழாவில்  பங்கேற்று மேலும் அவர்  பேசியது:
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ராமானுஜரும், 128 ஆண்டுகளுக்கு முந்தைய  அம்பேத்கரும் நாட்டில் சாதி, மதங்கள் என எதிலும் வேற்றுமை இல்லாமல், சமூகத்தில் ஒற்றுமையும், நல்லிணக்கமும் நிலவ  தத்துவரீதியாக ஒரே மாற்றத்தைத்தான் விரும்பினர்.
ஆனால், இன்று அவர்கள் பெயராலேயே பல்வேறு வேற்றுமைகள் உருவாக்கப்பட்டு, அரசியல் செய்யப்படுகிறது. அதன் வழியில் செல்வது இளைஞர்கள் செய்யும் துரோகமாகும். இதுபோன்றவற்றிலிருந்து இளைஞர்கள் விடுபட்டு, சமூக ஒற்றுமை, நல்லிணக்கத்துக்காக சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்றார்.
விருதுகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பேசியது:
இந்திய மக்கள்தொகையில் 60 சதவிகிதத்தினர் இளைஞர்கள்தான். அந்த இளைஞர் சக்தி மூலம் நல்ல கனவு கண்டு அதை நடைமுறைப்படுத்தினால், இந்த தேசம் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி கண்டு வல்லரசாகும் என்றார் அப்துல்கலாம்.
ஆனால், இந்தத் தேசம் பற்றிய சிந்தனை எல்லா இளைஞர்களிடம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே. 125 கோடி மக்கள்தொகை கொண்ட இந்த நாட்டில் பல்வேறு பிரச்னைகளும், ஏற்றதாழ்வுகளும் நிலவுகின்றன. அதையெல்லாம் தாண்டி இளைஞர்கள் சாதனை படைக்க வேண்டும்.  அதற்கு கல்வியும், வாய்ப்புகளும் அவசியமாகும்.
சமுதாயத்தில் உள்ள அவலங்கள், பிரச்னைகள், விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள்  ஒருபுறம் இருக்கட்டும்.  தீர்க்க முடியாத பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.  இளைஞர்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட்டுச் செயல்படுவதோடு, சமூக அக்கறையையும் வளர்த்துக் கொண்டு, ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் பேணிக்காக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
விழாவில்,  சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான கக்கனுக்கு   வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதை அவரின் இரண்டாவது மகன் பாக்கியநாதன் பெற்றுக் கொண்டார். 
பல்வேறு வகைகளில் சிறப்பாகப் பணியாற்றிய கடலூர் அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் மாரியப்பன்,  கடல் சார்ந்த விளையாட்டைக் கற்றுத் தரும்  மூர்த்தி மேகவன், நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த முதல் பட்டதாரி பெண் சுவேதா மகேந்திரன், சென்னை சிலம்பம் சேகர், விருதுநகர்  பேராசிரியை உமாதேவி ஆகியோருக்கு ராமானுச்சாரியா-  அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது.
சிந்தனையாளர்கள் மன்ற சுதர்சன் தலைமை வகித்தார். தேசியக் கல்லூரிச் செயலர் கே. ரகுநாதன், புலவர் மாது, பேராசிரியை சுமதி,  தேவேந்திர தன்னார்வ அறக்கட்டளைத் தலைவர் எம். தங்கராஜ்,  வழக்குரைஞர் அருணாசலம் இளங்குமார்சம்பத்,  நந்தனார் சேவாஸ்ரம மேலாண்மை அறங்காவலர் தடா பெரியசாமி ஆகியோர் கருத்தரங்க உரையாற்றினார்.  
கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com