அரசு மதுபான கிடங்கு சுமைதூக்கும் பணியாளர்கள் வேலைநிறுத்தம்

திருச்சி  துவாக்குடி பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான  கிடங்கு சுமைதூக்கும்  பணியாளர்கள் 7 பேர்  பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து புதன்கிழமை காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி  துவாக்குடி பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான  கிடங்கு சுமைதூக்கும்  பணியாளர்கள் 7 பேர்  பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து புதன்கிழமை காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் அரசு மதுபான (டாஸ்மாக்)  கிடங்கு உள்ளது.  இந்த கிடங்கில் சுமைதூக்கும் பணியாளர் 62 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி நடந்த சோதனையின் போது, பணி முடிந்து வெளியே வந்த சுமைதூக்கும் தொழிலாளர்களில் 7 பேரிடம் மதுவகைகள் இருந்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் 7 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், 11 பேர் அதேபோல மதுப்பாட்டில்களுடன் வந்ததாகவும், அவர்கள் சோதனைக்கு முன்னரே சுவர் ஏறி குதித்து தப்பியோடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
சோதனையில் சிக்கிய தொழிலாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் நோக்கில், மதுப்பாட்டில்களை மறைத்து எடுத்துச் சென்றதை நேரில் பார்த்ததாக  சக பணியாளர்களிடம் டாஸ்மாக் நிர்வாகம் எழுதிப் பெற்றுள்ளது. இந்த செயல்களை கண்டித்து புதன்கிழமை காலை சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனர். 
இதில், அனைத்துப் பகுதிகளுக்கும் மதுபான வகைகளை ஏற்றிச்செல்லும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து  அரசு மதுபான கிடங்கு நிர்வாகம் தரப்பில் (பொறுப்பு) மேலாளர் செல்வம்  மற்றும் திருவெறும்பூர் வட்டாட்சியர் ஷோபா மற்றும் தொழிலாளர் தரப்பில்  சிஐடியு மாநில ஒருங்கிணைப்புகுழு  உறுப்பினர் குணசேகர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள்  சதீஷ்,   ரமேஷ்,  ஏடிபி தொழிற்சங்க நிர்வாகி அருள்ராஜ்,  டாஸ்மார்க் சங்க மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்,  துவாக்குடி  காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர்  சண்முகசுந்தரம்  உள்ளிட்டோர் பேச்சு மேற்கொண்டனர்.
இதில், முறைகேடில் சிக்கிய 7 பேரையும் பணி நீக்கம் செய்வதாகவும், தப்பி ஓடிய 11 பேரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து, கலந்து ஆலோசித்து பின்னர்  பணி வழங்குவதாகவும், மற்ற தொழிலாளர்கள் இனி இதுபோன்ற தவறுகளில் ஈடுபடமாட்டோம் என உறுதி அளித்து  (எழுதிக்கொடுத்து ) விட்டு  பணிக்கு வரலாம் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது. அதன் அடிப்படையில் உறுதி அளித்த தொழிலாளர்கள் பகலில் பணிக்கு திரும்பினர்.  மேலும் பணி இழந்த 18 பேரையும் மீண்டும் பணியில் சேர்ப்பது குறித்து தொடர்ந்து  டாஸ்மாக் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என சிஐடியு ஒருங்கிணைப்பாளர்  குணசேகரன் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com