கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திருச்சி மாவட்டத்துக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலரும், தமிழக கனிமவள நிர்வாக இயக்குநருமான மகேசன் காசிராஜன்

திருச்சி மாவட்டத்துக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலரும், தமிழக கனிமவள நிர்வாக இயக்குநருமான மகேசன் காசிராஜன் தலைமையில், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மாநகராட்சி, தீயணைப்புத்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், கண்காணிப்பு அலுவலர் மகேசன் காசிராஜன் கூறியது: காவிரியில் 54 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 1.90 லட்சம் கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, திருச்சி மேற்கு, திருச்சி வடக்கு, திருவரங்கம், லால்குடி வட்டங்கள், முசிறி, தொட்டியம், அந்தநல்லூர், லால்குடி ஒன்றியங்களில் காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆற்றின் குறுக்குப் பாதைகள் உடனடியாக அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  ஆபத்தான பகுதிகளான மேலசிந்தாமணி, சத்திரம் பேருந்துநிலையம், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஷ், பஞ்சக்கரை, மேலூர், குணசீலம், திருப்பராய்த்துறை, பெருகமணி, உன்னியூர், முசிறி பரிசல்துறை, வேங்கூர், இடையாற்றுமங்கலம், நத்தம் ஆகிய பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி குழுவினர் இந்த பகுதிளில் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். ஆபத்து பகுதிகள் என கண்டறியப்பட்ட பகுதிகளுக்குள் வரும் அனைத்துத்துறை அலுவலர்கள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை 24 மணிநேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இக் கூட்டத்தில், ஆட்சியர் கு.ராசாமணி, மாநகரக் காவல் துணை ஆணையர் நிஷா, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சங்கரநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மலர்விழி மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com