காவிரி, கொள்ளிடத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருச்சி, காவிரி, கொள்ளிடத்தில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் 3 வட்டங்கள், 4 ஒன்றியங்களுக்கு

திருச்சி, காவிரி, கொள்ளிடத்தில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் 3 வட்டங்கள், 4 ஒன்றியங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு ஒட்டுமொத்த அரசு பணியாளர்களும் 24 மணிநேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாயனூர் அணையிலிருந்தும், முக்கொம்பு பகுதியிலிருந்தும் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரியில் அதிகபட்சமாக 37 ஆயிரம் கன அடியும், மீதமுள்ள தண்ணீர் முழுவதும் கொள்ளிடத்தில் திறக்கும் சூழல் உள்ளது. இதன்காரணமாக கொள்ளிடத்திலும், காவிரியிலும் வெள்ளம் கரைபுரண்டுள்ளது. கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை 3 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9 குடும்பங்கள் வெளியேற்றம்: காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேறவு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, திருப்பராய்த்துறையில் 9 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முசிறிவட்டம், பரிசல் துறை, தொட்டியம் வட்டம் உன்னியூர் ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆட்சியர் கு.ராசாமணி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

அம்மா மண்டபம் படித்துறை மூடல்
காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அம்மா மண்டப நுழைவு பகுதியை அடைத்து பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் தடுப்பு ஏற்படுத்தி போலீஸார் கண்காணித்து வருகின்றனர். கம்பரசம்பேட்டை தடுப்பணையும் மூழ்கி, படித்துறை பகுதிகளிலும் தண்ணீர் மூழ்கடித்தபடி செல்கிறது. இந்த பகுதியிலும் பொதுமக்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டு போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com