தப்பியது கொள்ளிடம் புதுப்பாலம்!

திருச்சியில் சனிக்கிழமை நள்ளிரவு உடைந்த கொள்ளிடம் இரும்புப் பாலத்தின் அருகிலுள்ள புதுப்பாலம் பொறியாளர்களின் சமயோசிதத்தால் ஆபத்திலிருந்து தப்பியது.

திருச்சியில் சனிக்கிழமை நள்ளிரவு உடைந்த கொள்ளிடம் இரும்புப் பாலத்தின் அருகிலுள்ள புதுப்பாலம் பொறியாளர்களின் சமயோசிதத்தால் ஆபத்திலிருந்து தப்பியது.
தற்போது இடிந்துள்ள கொள்ளிடம் இரும்புப் பாலத்தின் மேற்குப் பகுதியில் புதிய பாலம் கடந்த 2016 பிப்ரவரி 14-ல் திறக்கப்பட்டது. அந்தப் பாலத்தை பொறியியல் வல்லுநர்கள் பழைய பாலத்தின் மேற்கு திசையில் அமைத்ததன் சிறப்பு தற்போது தெரியவந்துள்ளது.
புதிய பாலம் அமைக்கும்போது எந்தப் பகுதியில் இடம் உள்ளதோ அந்த பகுதியில் அமைப்பதுதான் வழக்கம். 
ஆனால் கொள்ளிடம் பாலம் அமைக்கும்போது, பழைய பாலத்துக்கு கிழக்குப் பகுதியில் ஏராளமான இடம் இருந்தும், அப்பகுதியில் அமைக்கவில்லை. மேற்குப் பகுதியில் இருந்த குடிசைகளை அகற்றிவிட்டு மேல் திசையிலேயே புதிய பாலம் அமைக்கப்பட்டது. 
தற்போது பழைய பாலம் இடிந்த நிலையில், அதற்கு கிழக்குப் பகுதியில் புதிய பாலம் இருந்திருந்தால், பழைய பாலத்திலிருந்து இடிந்து விழுந்த மிகப்பெரிய அளவிலான இரும்பு கர்டர்கள் மற்றும் பாலத்தின் இடிபாடுகளால் புதிய பாலம் விரைவில் சேதம் அடைந்திருக்கும்.  நீரின் போக்கு கடுமையாக இருப்பதால், புதிய பாலத்தின் தூண்களை இடிபாடுகள் தாக்கி அவை உடைபடும் அபாயம் ஏற்பட்டிருக்கும்.  நீர் போக்கின் தன்மைக்கு ஏற்ப, தொலைநோக்குப் பார்வையின் பயனால் புதிய பாலம் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்டது. அதனால் இடிபாடுகள் பாலத்துக்கு ஆபத்தின்றி வெள்ள நீரில் சென்றதால் புதிய பாலம் தப்பியது.
இதில் மற்றொரு  பார்வையும் உண்டு.  அதாவது கடந்த கால கட்டடங்களைப்போல தற்போதைய கட்டடங்கள், பாலங்கள் இருப்பதில்லை என்ற புகார்களும் உள்ளன. அந்த வகையில் இந்தப் புதிய பாலமும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாலத்தை மேற்கு திசையில் கட்டினார்களா என்ற சந்தேகமும் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
 எது எப்படியோ புதிய பாலம் தப்பியது. இல்லையேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com