கும்பகோணம்  ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சிலிண்டர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென சிலிண்டர் தீப்பற்றி எரிந்தது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை. 

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென சிலிண்டர் தீப்பற்றி எரிந்தது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை. 
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள்,  பொதுமக்கள், வெளி மாநிலத்தவர்கள் எனப் பலர் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வந்தனர்.
அப்போது,  நாட்டியாஞ்சலி தொடக்க விழாவும் நடைபெற்றது.  இந்த விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் அனைத்து முக்கிய பிரமுகர்களும் மேடை அருகில் இருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்தியை முன்னிட்டு கோயிலில் தனியார் அமைப்பு சார்பில் இரவு முழுவதும் வரும் பக்தர்களுக்காக பால் தருவது வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பால் வழங்குவதற்காக கோயில் கொடி மரம் அருகே ஈசான்ய மூலையில்,  எரிவாயு உருளையை (கேஸ் சிலிண்டர்) கொண்டு பால் காய்ச்சி கொண்டிருந்தனர்.
அப்போது,  திடீரென எதிர்பாராதவிதமாக எரிவாயு உருளையில் உள்ள ரப்பர் குழாயில் தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த சமையல்காரர் கூச்சலிடவே , கோயிலின் உள்ளே மூலவர் மற்றும் அம்மன் சன்னதியில் இருந்த பக்தர்கள் அலறி அடித்து கொண்டு வெளியில் ஓடிவந்தனர். இதையறிந்த வெளியில் இருந்த பக்தர்களும்,  நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிக்கு வந்தவர்களும் கோயிலுக்கு உள்ளே செல்ல முயன்றதால் சிறிதுநேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது,  எரிவாயு உருளை குழாய் எரிந்து கொண்டிருந்தது. சுமார் 20 நிமிஷங்கள் எரிந்து கொண்டிருந்த போது, நாட்டியாஞ்சலி விழாவுக்கு வந்த நீதிபதியின் பாதுகாவலர் எஸ்ஐ பாபுவும், கோயில் ஊழியர் சிவாஜி ஆகிய இருவரும், சம்பவத்தை புரிந்து கொண்டு, அதிரடியாக சணல் சாக்கை தண்ணீரில் நனைத்து, எரிந்து கொண்டிருந்த எரிவாயு உருளை குழாயின் மேல் போர்த்தினர். இதையடுத்து குழாயில் பற்றிய தீ அணைந்தது. தொடர்ந்து, எரிவாயு உருளையும் தண்ணீரால் குளிர்விக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இருப்பினும் தீ விபத்து காரணமாக கோயில் பகுதியில் சுமார் 30 நிமிஷங்களுக்கு பரபரப்பு காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com