"மனித இனத்தை அழிக்க கண்டுபிடிக்கப்பட்ட  மாபெரும் ஆயுதம்தான் பிளாஸ்டிக்'

மனித இனத்தை அழிக்க, மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் ஆயுதம்தான் பிளாஸ்டிக் என சூழலியல் அறிஞரும், எழுத்தாளருமான பாமயன் தெரிவித்தார்.

மனித இனத்தை அழிக்க, மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் ஆயுதம்தான் பிளாஸ்டிக் என சூழலியல் அறிஞரும், எழுத்தாளருமான பாமயன் தெரிவித்தார்.
திருச்சி காவேரி மகளிர் கல்லூரி தண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்றத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  சிறப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியது: மேற்குத் தொடர்ச்சி மலையும், கடல்பரப்பும் கொண்ட நமது சூழியல் அமைப்பானது வேறு எங்கும் இல்லாத அரிய சூழியல் அமைப்பாக உள்ளது. ஆனால், மக்களின் அறியாமையாலும், மேற்கத்திய கலாசாரம், நவீன மயம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் சூழல் அமைப்பை சிதைத்து வருகிறோம். 
இயற்கையோடு இணைந்து வாழ்தலே நமது நாகரிகம். இயற்கையைவிட்டு மெல்ல, மெல்ல விலகிச் சென்றால் இயற்கையும் நம்மைவிட்டு விலகிச் சென்றுவிட்டது.  நீராதாரங்களை கபளீகரம் செய்ததுடன் கடற்பரப்பை மிகப்பெரிய குப்பைத்தொட்டியாகவே பயன்படுத்தி வருகிறோம். இந்திய நீர்நிலைகளில் கடலையும் சேர்த்து நடத்திய ஆய்வில் மைக்ரோபைபர் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் துகள் என ஒதுக்கிவிட முடியாது இந்த துகளே பல்வேறு வடிவங்களில் மனித உடலிலும், விலங்குகள் உடலிலும் உள்புகுந்து புற்றுநோய் பாதிப்புக்கு வித்திடுகிறது. மனித இனத்தை அழிக்கும் பேராயுதமாக இருப்பது பிளாஸ்டிக் மட்டுமே.
இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல், தண்ணீரைப் பாதுகாத்தல், நீராதாரங்களை அதிகரித்தல், ஏரி, குளங்களை அதிகரித்தல், பிளாஸ்டிக் தவிர்ப்பு, மரபு சார்ந்த உணவு முறைகளை மீண்டும் கொண்டுவருதல், உயிர்ம நேயத்தை வளர்த்தல், பணத்தை முன்னிலைப்படுத்தாமல் சூழியலை முன்னிலைப்படுத்தும் ஜிடிபி முறை ஆகியவற்றால் மட்டுமே நமது சூழியல் அமைப்பை காக்க முடியும்.  இயற்கை ஆதாரங்களே நமது ஆதாரங்கள் என்பதை அனைவரும் கட்டாயம் உணர வேண்டும் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில், தண்ணீர் அமைப்பின் செயலர் கே.சி. நீலமேகம், இணைச் செயலர்கள் ஆர்.ஏ. தாமஸ், கி. சதீஷ்குமார், கல்லூரியின் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர்கள் மு. அனு, இர. கீர்த்தனா ஆகியோர் சுற்றுச் சூழல் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசினர். கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com