"கல்வெட்டு, ஓலைச் சுவடி வாசிப்புப் பயிற்சி அவசியம்'

இன்றைய மாணவர்கள் கல்வெட்டு, ஓலைச் சுவடிகளை வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தின் ஓலைச்சுவடி பிரிவுத் தலைவர் மணிமாறன் அறிவுறுத்தினார்.

இன்றைய மாணவர்கள் கல்வெட்டு, ஓலைச் சுவடிகளை வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தின் ஓலைச்சுவடி பிரிவுத் தலைவர் மணிமாறன் அறிவுறுத்தினார்.
திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியின் முதுகலைத் தமிழாய்வுத் துறை, இளங்கலைத் தமிழ்த் துறை ஆகியவை இணைந்து புதன்கிழமை நடத்திய கல்வெட்டுகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் பேசியது:
நமது முன்னோரது சமூகப் பொருளாதார, உயர்ந்த சிந்தனைகள், நிர்வாகத்திறமைகளை கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் மூலமே அறிந்து கொள்ள முடியும். தஞ்சை பெரியகோயிலுக்கு ராஜராஜசோழன் தானமாக வழங்கிய ஏராளமான கால்நடைகளைப் பராமரிக்கும் ஒவ்வொருவருக்கும் 48 கால்நடைகள் வழங்கியதும், அதைப் பெற்றவர்கள் கோயிலுக்கு தலா ஓர் உழக்கு நெய்யை தினமும் வழங்க வேண்டும் என்ற செய்தியும் கோயில் கல்வெட்டில் இருப்பதைக் காணலாம். 
கட்டடக் கலையிலும், ஏரி,குளங்கள் வெட்டுவதிலும் நம் முன்னோர் சிறந்து விளங்கினர். ஏரியானது 8 ஆம் பிறை வடிவத்தில் இருக்க வேண்டும். ஒரு ஏரியானது அந்த ஊரின் பாசன நிலத்துக்குச் சமமான பரப்பளவைக் கொண்டிருத்தல் வேண்டும். அதிகப்படியான ஏரி நீர் பூமிக்குள் சென்றால் அதை பாசனத்துக்கு தேவையான தருணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம், ஏரிகளில் இருந்து கால்வாய் அமைக்கலாம் போன்ற விவரங்ளை கல்வெட்டுகளிலும், ஓலைச்சுவடிகளிலும் நமது முன்னோர் பதிவு செய்துள்ளனர்.
இதுமட்டுமின்றி வாழ்வியல் தத்துவம், வாழ்க்கை அடிப்படைக் கூறுகள், கல்வி, சமூகம், பொருளாதாரம், ஆட்சி முறை, கொடை, வேளாண்மை, வணிகம் என பல்வேறு தகவல்களை குவியல், குவியலாக கல்வெட்டிலும், ஓலைச்சுவடிகளிலும் குவிந்து கிடக்கின்றன. ஆனால், அவற்றை வாசித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கவோ, ஆவணப்படுத்தவோ எடுக்கப்படும் முயற்சிகள் மிகவும் குறைவாகவே உள்ளன.
கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகளை படிக்கும் திறனுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலைநாட்டவர் பலரும் நமது கல்வெட்டு, ஓலைச்சுவடிகள் குறித்து ஆய்வு செய்து நூலாக வெளியிடுகின்றனர். தமிழகத்திலும் இத்தகைய நடவடிக்கைகள் அதிகளவில் உள்ளன. ஆனால், கல்வெட்டுகளை வாசிக்கும் நபர்களும், ஓலைச்சுவடிகளை படித்துத் தெரிவிக்கும் நபர்களும் சொற்ப அளவிலேயே உள்ளனர். இதனால், இத்தகைய பணிகள் சுணக்கமாகவே உள்ளன. இன்றைய தமிழ்த்துறை மாணவர்கள் சுவடி, கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற வேண்டியது அவசியம். பெண்கள் அனைத்துத் துறையிலும் முன்னேறி வரும் சூழலில் கல்வெட்டுத்தொடர்பான கல்வியைக் கற்று திறன் மிக்கவர்களாக வளர வேண்டும். பிராமி, தமிழ், திராவிட எழுதுக்களில் கல்வெட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப பயிற்சியும் அவசியம் என்றார் அவர்.
கல்லூரி முதல்வர் கிறிஸ்டி செல்வராணி, தமிழ்த் துறைத் தலைவர் தே. இந்திரகுமாரி, கல்லூரி தலைவர் பத்மா ராமகிருஷ்ணன், பேராசிரியர் அமிர்தகடேசுவரர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com