பாஸ்போர்ட் அலுவலகம், சேவை மையங்களில் உதவி மையங்கள் தொடர்ந்து செயல்படும்

பாஸ்போர்ட் அலுவலகத்திலும், சேவை மையங்களிலும் உதவி மையங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன என்றார் திருச்சி பாஸ்போர்ட்

பாஸ்போர்ட் அலுவலகத்திலும், சேவை மையங்களிலும் உதவி மையங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன என்றார் திருச்சி பாஸ்போர்ட் அலுவலர் எஸ். லிங்குசாமி.
திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துடன் திருச்சி,  தஞ்சாவூரிலும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் திருச்சி பாஸ்போர்ட் சேவை  மையத்தின் நுழைவுவாயில் பகுதியில் விண்ணப்பதாரர்களுக்கு உதவ முன்னாள் படைவீரர்கள் அமைத்துள்ள உதவிப் பிரிவு வேறு பகுதிக்கு மாற்றப்படுவதாக மாறுபட்ட தகவல் வெளியான நிலையில், அதற்கு மறுப்புத் தெரிவித்து லிங்குசாமி கூறியது:
திருச்சி, தஞ்சாவூர் சேவை மையங்களைக் கொண்டு திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இயங்குகிறது. இந்த இரு மையங்களிலும் அலுவலக நேரங்களில் பொதுமக்களின் நலனுக்காக உதவி மையங்களும், விசாரணை கவுண்டர்களும் செயல்படுகின்றன.
திருச்சி பாஸ்போர்ட் சேவை மையத்தில் முன்னாள் படைவீரர்கள் உதவிப் பிரிவு  வேறு கட்டடத்துக்கு மாற்றப்படவில்லை. அதே வளாகத்தில்தான் மாற்றப்பட்டு செயல்படுகிறது.
மேலும், திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்  அளிக்கவும், பாஸ்போர்ட் சேவை தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் சமூகத் தணிக்கைப் பிரிவும் செயல்படுகிறது.
மேலும் தமிழக அரசின் இணையவழி சேவை மையமும் பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது.  விண்ணப்பதாரர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் பாஸ்போர்ட்  விண்ணப்பித்தல் இணையவழியாகச் செய்து தரப்படுகிறது.   7 நாள்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில்  1800-258-1000 என்ற கட்டணமில்லா தொலைபேசி  எண்  மூலம் பொது விசாரணை, பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, காவல்துறை விசாரணை நிலை போன்றவற்றை விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளவும் பாஸ்போர்ட் அலுவலகம் ஏற்பாடு செய்திருக்கிறது.
எனவே பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும்  சந்தேகங்கள், குறைகளுக்கு பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் சேவை மையங்களில் இயங்கி வரும்  உதவி மையத்தை அணுகலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com