திருச்சியில் தொடங்கியது உலக நாத்திகர் மாநாடு: இன்று கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு

அயல்நாடுகள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள் பங்கேற்கும் உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருச்சியில் தொடங்கியது உலக நாத்திகர் மாநாடு: இன்று கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு

அயல்நாடுகள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள் பங்கேற்கும் உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திராவிடர் கழகம், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நாத்திகர் மையம், பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை இணைந்து 3 நாள்களுக்கு இந்த மாநாட்டை நடத்துகின்றன. இதன் தொடக்க விழா, திருச்சி கே.சாத்தனூரில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தலைமை வகித்து திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி பேசியது: 
எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை உள்ளிட்ட அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உரிமைகளில் ஒன்றாக இருப்பதும் நாத்திகம். வர்ணாசிரம கொள்கையால் மக்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரித்து ஏற்றத்தாழ்வு, பாகுபாடு, தீண்டாமை, பெண்அடிமையை ஊக்குவிப்பதை எதிர்ப்பதாகும். மனித குலம் அனைவருக்கும் சரிநிகர் சமம். உலகம் முழுவதும் ஒரே சமூகம், ஒரே மனிதம் என்பதை நோக்கி செயல்படுவதாகும். உலகம் முழுவதும் மூடநம்பிக்கைகள் இருந்தாலும், இந்தியாவில் அதிகமாக உள்ளது. அவற்றை அகற்றுவதற்கான அரணாக இந்த மாநாடு அமைந்துள்ளது என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா: நாத்திகத்தை நாடும் பலரும் தங்களுக்கு கடும் இன்னல்கள் வரும்போது நாத்திக மறுப்பாளர்களாகவும், கடவுள் ஏற்பாளர்களாகவும் மாறும் நிலை உள்ளது. 

ஆனால், திஹார் சிறையில் இருந்த காலத்தில்தான் நான் தீவிர நாத்திகராக மாறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி தொடரப்பட்ட 2 ஜி வழக்கின் காரணமாகத்தான் உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளேன். பகுத்தறிவுதான் என்னை பக்குவப்படுத்தியது என்றார்.

இதில், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலர் சுப. வீரபாண்டியன்,  விஜயவாடா நாத்திகர் மைய இயக்குநர் கோ. விஜயம், பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றிய முதன்மைச் செயலர் அலுவலர் கேரி மெக்லேலன்ட், ஆலோசனை இயக்குநர் எலிசபெத் ஓ.கேசி, புணேவில் உள்ள அந்தஸ்ரத்தா நிர்மூலன் சமிதியின் செயல் தலைவர் அவினாஷ் பாட்டீல், அமெரிக்க நாட்டு நாத்திகக் கூட்டணி அமைப்பின் ரஸ்தம் சிங், வரியியல் வல்லுநர் ச. ராஜரத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

முன்னதாக படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்கள் கௌரி லங்கேஷ், நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகியோரின் உருவப்படம் திறக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், கி. வீரமணி, ச. ராஜரத்தினம், சுரேந்திர அஜ்நத், பெரியார் எழுதிய 5 நூல்கள் வெளியிடப்பட்டன.

இதன்தொடர்ச்சியாக, ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டு 2 அமர்வுகளில் விவாதம் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வுகள், சனிக்கிழமை (ஜன.6) காலை தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெறுகிறது. 

மாலையில் திருச்சி பெரியார் மாளிகையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பேசுகின்றனர். மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை திருச்சி சிறுகனூரில் மரக்கன்றுகள் நடும் விழா, தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா, தமிழர் திருநாள் கொண்டாட்டங்களுடன் மாநாடு நிறைவு பெறுகிறது.

இதில், அமெரிக்கா, லண்டன், மலேசியா, சிங்கப்பூர், குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகள், ஆந்திரம், தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம், மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர்கள், பேராசிரியர்கள், பகுத்தறிவாளர்கள் என பலர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com