ரூ.1 கோடி மதிப்பில் பழைய 500, 1000 நோட்டுகள் பறிமுதல்

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் வழியாக சனிக்கிழமை காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான பழைய ரூ. 1000, ரூ. 500 நோட்டுகளையும், காரையும் சனிக்கிழமை மாலை போலீஸார் பறிமுதல்

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் வழியாக சனிக்கிழமை காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான பழைய ரூ. 1000, ரூ. 500 நோட்டுகளையும், காரையும் சனிக்கிழமை மாலை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தி. விஜயன்(40). இவர் சேலத்தில் கார் பழுது நீக்கும் பட்டறை வைத்துள்ளார். இவருக்கு சொந்தமான காரில் விஜயனும், ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கானார் பாளையத்தைச் சேர்ந்த மு. விஜயராஜும் (50), 1 கோடி மதிப்பிலான பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு துறையூர் வழியாக சென்றனர்.
இவர்களுக்கு துணையாக மற்றொரு காரில் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கோரிக்காட்டைச் சேர்ந்த செ. வேலுசாமி(50), திருச்செங்கோடு வட்டம், சின்னதம்பிபாளையத்தைச் சேர்ந்த ரா. சின்னதம்பி (45) ஆகியோரும் பின்னால் சென்றனர்.
இவர்கள் அனைவரும் துறையூர் நகருக்குள் செல்லாமல் துறையூர் அருகேயுள்ள வெங்கடேசபுரம் கிராமம் வழியாக சென்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், தற்போது துறையூர் கோவிந்தபுரம் பிரிவு சாலை அருகே பாட்டில் சுத்தம் செய்யும் நிறுவனம் வைத்திருப்பவருமான பன்னீர் என்பவர் கொடுத்த தகவலின் பேரில், வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த க. சுரேஷ்பாபு(29), ரா. சுரேஸ்(32), கி. அருண்(23), க.பாளையத்தைச் சேர்ந்த வீ. தமிழ்செல்வன்(32), பா. மோகன்(29) ஆகிய 5 பேரும் காரை மறித்து அதில் உள்ள பணம் குறித்து விசாரித்தனர்.
இதனால், பதற்றமடைந்த அவர்கள் தப்பிக்க காரை வேகமாக ஓட்டிச் சென்றனர். இதுகுறித்து 5 பேரும் துறையூர், உப்பிலியபுரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், தங்களது இருசக்கர வாகனங்களில் 5 பேரும் காரை விரட்டிச் சென்றனர்.
உப்பிலியபுரம் காவல் நிலையம் அருகே போலீஸார் காரை சோதனைக்காக நிறுத்துமாறு சைகை காட்டினர். அப்போது, பணத்தாள்களை எடுத்துச் சென்ற கார் நிற்காமல் சென்றது. பின்னால் வந்த மற்றொரு காரை போலீஸார் தடுத்து நிறுத்தி, உப்பிலியபுரம் காவல் நிலையத்துக்கு அனுப்பினர். உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் கொப்பம்பட்டி வரை விரட்டி சென்று பணத்துடன் சென்ற காரை மடக்கிப் பிடித்தார்.
இதையடுத்து அந்த காரையும் உப்பிலியபுரம் காவல் நிலையத்துக்கு கொண்டுவந்தனர். சோதனையில், 77.50 லட்சத்துக்கு பழைய 1000 ரூபாய் நோட்டுகளும், 22.50 லட்சத்துக்கு பழைய 500 ரூபாய் நோட்டுகளும் இருந்தது. பின்னர், பணத்தையும், காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, காரில் சென்ற 4 பேர், அதனை விரட்டிச் சென்ற 5 பேர், தகவல் சொன்ன பன்னீர் ஆகிய 10 பேரிடமும் முசிறி டிஎஸ்பி (பொறுப்பு) கோவிந்தராஜூ, துறையூர் காவல் ஆய்வாளர் எல். மனோகரன், துறையூர் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com