மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு: 581 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா ஆலயத் திடலில், வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 581 காளைகள் பங்கேற்றன. 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா ஆலயத் திடலில், வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 581 காளைகள் பங்கேற்றன. 
 ஆலயத்தில் சிறப்பு திருப்பலி முடிந்து, புனித நீர் தெளிக்கப்பட்டு ஊர்முக்கியஸ்தர்கள் முன்னிலையில ஊர்வலமாக வாடிவாசல் வந்தடைந்த கோயில் காளைகள் முதலில் அவிழ்க்கப்பட்டது.19 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் 581 காளைகளும், 8 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் 362 காளையர்களும் களம் கண்டனர். போட்டியை திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தொடங்கி வைத்தார். கோயில் காளைகளை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் அழைத்துவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்தது. சில காளைகள் களத்தில் நின்ற இளைஞர்கள் தொட முடியாதபடி பாய்ந்து ஓடின. போட்டியில் பங்கேற்ற வீரர்கள் காளைகளின் திமிலைப் பிடித்து அடக்கினர். வெற்றிபெற்ற வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக் காசு, ரொக்கம், பீரோ, கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.  வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
  மணப்பாறை பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற பொத்தமேட்டுபட்டி ஜல்லிக்கட்டுக்கு பார்வையாளராக வந்திருந்த பிரான்ஸ் நாட்டின் "தி ஸ்கோர்ஸ் கேமர்கூயஸ்' ( மாடு பிடி விளையாட்டு )-ன் தேசிய தலைவர் ஹென்றி ஹெய்யர் கூறும்போது, "இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு எங்கள் நாட்டில் இருப்பது போலவே உள்ளது. நாங்களும் மாடுகளை துன்புறுத்துவது இல்லை. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி, போராட்டம் நடந்தபோது, எங்கள் நாட்டிலிருந்தவாறு நாங்களும் ஆதரவளித்தோம். தமிழ்நாட்டு இளைஞர்களின் மத்தியில் ஜல்லிக்கட்டிற்கு வரவேற்பும், போராட்டத்திற்கு உரிய தன்னெழுச்சியும் உள்ளது. இது போன்று எங்கள் நாட்டின் இளைஞர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றார்.
 போட்டியில், 22 வீரர்கள், 7 மாட்டு உரிமையாளர்கள், 3 பார்வையாளர்கள் சிறுகாயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவகுழுவினர் சிகிச்சை அளித்தனர். விழாவின் கதாநாயகனாக 14 காளைகளை பிடித்து அடக்கிய மதுரை அழங்காம்பட்டியைச் சேர்ந்த அடைக்கனுக்கு (27), மணப்பாறை வட்டாட்சியர் தனலெட்சுமி சார்பில் ரூ.2 ஆயிரம் ரொக்கமும், விழா கமிட்டி சார்பில் ஸ்டீல் பிரோ ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த காளை வளர்ப்பாளருக்கான பரிசு பனந்தோப்பு தேவசகாயம்பிள்ளைக்கு வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com