டெல்டா பாசனத்துக்காகத் திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி வந்தது

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் சனிக்கிழமை திருச்சி வந்தடைந்தது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் சனிக்கிழமை திருச்சி வந்தடைந்தது.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக ஜூலை 19 ஆம் தேதி வினாடிக்கு 20,000 கனஅடி வீதம் தண்ணீரை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த தண்ணீர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணைப் பகுதிக்கு வந்தடைந்தது. தொடக்கத்தில் குறைந்தளவில் வந்த தண்ணீர் படிப்படியாக அதிகரித்து 18,000 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. தொடக்கத்தில் மாயனூரிலிருந்து 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பிற்பகலில் 15,000 கன அடி வீதம் அதிகரிக்கப்பட்டது. மாயனூரிலிருந்து கிருஷ்ணராயபுரம், குளித்தலை வழியாக காவிரியாற்றில் வந்த தண்ணீருடன், அமராவதி ஆற்றிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரும் கலந்து வந்தது. சனிக்கிழமை மாலை திருச்சி முக்கொம்பு மேலணைப் பகுதியை வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து இந்த தண்ணீர் திருச்சி மாநகரம் வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை கல்லணையைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படும். விரைவாக கல்லணைக்குத் தண்ணீர் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஏற்கெனவே முக்கொம்பு மேலணை, கம்பரசம்பேட்டை பகுதிகளில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரும் சனிக்கிழமை காலை திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் அயிலை சிவசூரியன், தமாகா விவசாய அணித் தலைவர் புலியூர் ஏ.நாகராஜன், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் , ஸ்ரீரங்கம் ஹேமநாதன் உள்ளிட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் மலர்தூவி வரவேற்றனர். கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து வரும் 15,000 கன அடி தண்ணீர் வீதம் அப்படியே திறந்துவிடப்படும். தொடர்ந்து நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி: நீண்டநாள்களாக தண்ணீர் திறக்கப்படாமல் இருந்த நிலையில், முக்கொம்பு மேலணையிலிருந்து சனிக்கிழமை கூடுதலாகத் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கரையோரத்தில் பொதுமக்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சனிக்கிழமை மாலைக்குள் மேல் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கும் என்பதால் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வண்ணமாக இருந்தனர். இதுபோல, கம்பரசம்பேட்டை தடுப்பணைப் பகுதியிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டதால், அப்பகுதியிலும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com