திருச்சியில் இருவேறு இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து 41 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு

திருச்சியில் இரு வேறு இடங்களில்,  வீட்டின் பூட்டை உடைத்து  41 பவுன் நகைகள், ரூ.  1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்சியில் இரு வேறு இடங்களில்,  வீட்டின் பூட்டை உடைத்து  41 பவுன் நகைகள், ரூ.  1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி கே.கே. நகர் அருகேயுள்ள ஐயப்ப நகர் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.  பழைய கார் வியாபாரி.  இவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வயலூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க, தனது குடும்பத்துடன் சென்றிருந்தார்.  காலை 6 மணியளவில் பால்காரர் வீட்டுக்கு பால் கொடுக்க வந்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததுடன் ஆள் நடமாட்டம் ஏதுமில்லை என தெரியவந்தது.  இதனையடுத்து தொலைபேசி மூலம் அவர் செந்தில்குமாரை தொடர்பு கொண்டு வீடு திறந்து கிடந்த விவரத்தை தெரிவித்துள்ளார்.
உடனே  செந்தில்குமார் வீட்டுக்கு திரும்பினார். வீட்டினுள் சென்று பார்த்தபோது 6 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 45,000 உள்ளிட்ட பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது. இதனையடுத்து கே.கே. நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவானைக்காவில் 35 பவுன் நகை திருட்டு: திருச்சி திருவானைக்கா மேல விபூதி பிரகாரத்தைச் சேர்ந்தவர் எஸ். ராஜசேகரன் (50). இவர் தினமணி நாளிதழ்  ஸ்ரீரங்கம் பகுதி செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.  இவர் ஞாயிற்றுக்கிழமை காலை சமயபுரம் கோயிலுக்குச் செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். 
சுமார் 11.30 மணியளவில் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்புற பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அப்போது, வீட்டினுள் இருந்த  35 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. 
இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொடரும் திருட்டு: இதேபோல வெள்ளிக்கிழமை இரவிலும் இரு வீடுகளின் பூட்டுக்களை உடைத்து திருட்டு நடந்துள்ளது.
திருச்சி பொன்னகர் காந்தி தெரு பகுதியில் யுரேக்கா போர்பஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகம் மற்றும் சர்வீஸ் நிலையம் இயங்கி வருகின்றது. இங்கு  ஜூன் 15-ஆம் தேதி இரவு சுமார் 10.30 மணியளவில் பணியாளர்கள் அனைவரும் சென்ற பின்னர் கிளையின் உதவி மேலாளர் விஜயன் (40) என்பவர் நிறுவனத்தை பூட்டிச் சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது முன்புற பூட்டுக்கள் உடைக்கப்பட்டு, உள்ளேயிருந்த ரூ. 26,000 ரொக்கம் திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து திருச்சி கன்டோன்மென்ட் செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஸ்ரீரங்கம் ஏ வி பி நகர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஆ. கனகாம்பாள் (68).  சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு சனிக்கிழமை காலை திரும்பினார். 
அப்போது அவரது வீட்டின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ. 5 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது. இது குறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com