உயிரிழந்த உஷாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியீடு

திருச்சி பெல் ரவுண்டானா அருகே வாகனச் சோதனையின் போது காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் கீழே விழுந்து இறந்த உஷா  

திருச்சி பெல் ரவுண்டானா அருகே வாகனச் சோதனையின் போது காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் கீழே விழுந்து இறந்த உஷா  கர்ப்பிணி இல்லை என  பிரேத பரிசோதனை முதல்கட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியிருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம், சூலமங்கலத்தைச் சேர்ந்த ராஜா.  தனது மனைவி உஷாவுடன் கடந்த 7 ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு வந்தபோது பெல் ரவுண்டானா பகுதியில்  வாகனத் தணிக்கையில் இருந்த போலீஸார் ராஜா தலைக்கவசம் அணியாமல் வந்ததால் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அப்போது போலீஸாரிடம் பதில் கூறிவிட்டு ராஜா வந்த போது, போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றொரு வாகனத்தில் விரட்டி வந்து, ராஜா வாகனத்தை எட்டி உதைத்த போது, மோட்டார் சைக்கிளிலிருந்து இருவரும் கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த உஷா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
காவல் ஆய்வாளரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியதில் ஏராளமானோர் காயமடைந்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் காவல்துறை, வருவாய்த்துறைகளின் வாகனங்கள், பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.
இதுதொடர்பாக பெல் போலீஸார் 27 பேரை கைது செய்து திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 3 பேர் திருச்சி நீதித்துறை நடுவர் மன்றம் எண் -6-ல் திங்கள்கிழமை மாலை சரண் அடைந்தனர்.
கர்ப்பிணி இல்லை:  உயிரிழந்த உஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை திருச்சி கி.ஆ..பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதன்மையர் ஜி. அனிதா திங்கள்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். 
இறந்த உஷா 3 மாத கர்ப்பிணியாக இருந்த கூறப்பட்டு வந்த நிலையில் பிரேத பரிசோதனையின் முதல் கட்ட தகவல் அறிக்கையில், உஷா கர்ப்பிணி என எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.   பிரேத பரிசோதனை குறித்த விரிவான அறிக்கை சில நாள்களில் வரும் என்றும், அதில், உஷா கர்ப்பிணியாக இருந்தாரா அல்லது இல்லையா என்பது குறித்த முழுமையான தகவல் தெரிய வரும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன
இந்த அறிக்கையின் பேரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண் கூறும் போது, உஷா பிரேத பரிசோதனைஅறிக்கையில் அவர் கர்ப்பம் அடைந்திருக்கவில்லை என்றும், கர்ப்பப்பை காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அவர் கர்ப்பமாக இருந்திருந்தாலும்  வழக்கு விசாரணைகளிலோ அல்லது பிரிவுகளிலோ எந்தவித மாற்றமும் வரப்போவதில்லை. சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது தேவையான பிரிவுகளின் வழக்குப் பதியப்பட்டுள்ளது என்றார்.
மனைவி கூறினார் : தான் கர்ப்பமாக இருப்பதாக என்னுடைய மனைவி உஷா கூறினார். அவர் பொய் சொல்ல மாட்டார்.  உறவினர்கள் வந்து செல்வதால்  சூலமங்கலத்தில் நான் தற்போது இருக்கிறேன். அய்யம்பேட்டையில் நாங்கள் வாடகை வீட்டில் வசித்தோம். அந்த வீட்டில் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா எனப் பார்க்கிறேன். காவல்துறையினர் வழக்கை வேறு திசைக்கு மாற்றுகின்றனர்.  அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யட்டும் என்றார் உஷாவின் கணவர் ராஜா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com