கழிப்பிடங்களைப் பராமரிப்பதில் முனைப்பு காட்டும் மாநகராட்சி: கூகுள் வரைபடத்தின் வாயிலாக தேடும் வசதியும் உருவாக்கம்

மாநகரில் பொதுக் கழிப்பிடங்கள் பராமரிப்பதில் முனைப்புக் காட்டி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் முதலிடம் பெறுவதற்கான நோக்கி பயணத்தில் தீவிரம் காட்டி வருகிறது திருச்சி மாநகராட்சி.

மாநகரில் பொதுக் கழிப்பிடங்கள் பராமரிப்பதில் முனைப்புக் காட்டி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் முதலிடம் பெறுவதற்கான நோக்கி பயணத்தில் தீவிரம் காட்டி வருகிறது திருச்சி மாநகராட்சி.
தூய்மை இந்தியா திட்டத்தின் தூய்மை நகரங்களுக்கான கணக்கெடுப்பில் முதலிடத்தைப் பிடிப்பதற்கான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் திருச்சி மாநகராட்சி,  தூய்மை பொது கழிவறை ( ஸ்வ்ட்ச் பொது கழிவறை) என்ற பெயரில் கழிப்பிடங்களைப் பராமரித்து தூய்மை பணியை முன்னெடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் திருச்சி மாநகராட்சியின் உள்ள 65 வார்டுகளிலுள்ள சுமார் 450 கழிப்பிடங்கள் உள்ளன. இதில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கழிப்பிடங்கள் மாநகராட்சி நேரடியாக பராமரிப்பிலும்,  மற்றவை மகளிர் சுய உதவிக்குழுக்களின் கண்காணிப்பிலும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக ஒவ்வொரு கழிப்பிடத்தின் வெளிப்பகுதியிலும் பல்வேறு விவரக் குறிப்புகள் கொண்ட அறிவிப்புப் பலகை ஒட்டப்பட்டிருக்கிறது.  தூய்மை பொது கழிவறைத் திட்டத்தின் கீழ்,   ஒவ்வொரு கழிவறைக்கும் அடையாள எண் தரப்பட்டிருக்கிறது. திருச்சி மாநகராட்சிக்கான சுருக்க குறியீடு, வார்டு, கழிவறை அமைந்த பகுதியின் சுருக்கக் குறியீடு, கழிவறை எண் ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  மேலும் வார்டு எண், பராமரிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவின் பெயர், பராமரிப்பு நேரம், கழிவறையிலுள்ள வசதிகள், மேற்பார்வையாளர் பெயர், அவரது செல்லிடப்பேசி எண் போன்ற விவரங்களும் அளிக்கப்பட்டிருக்கின்றன.
கூகுள் வரைபடத்தில் தேடும் வசதி : மேலும், திருச்சி மாநகராட்சியிலுள்ள கழிப்பிடங்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதால், கூகுள் வரைப்படத்தில் அருகாமையில் உள்ள கழிப்பிட விவரங்களைத் தேடுபவர்களுக்குத் தகவல் அளிக்கும் வசதி ஏற்பட்டிருக்கிறது.  வெளியூர்களிலிருந்து வருபவர்கள் யாரேனும் மாநகரில் எந்தெந்த பகுதியில் கழிப்பிடங்கள் உள்ளன, அருகாமையில்உள்ள கழிப்பிடம் எவை போன்ற விவரங்களை கூகுள் வரைபடத்தில் தெரிந்து கொள்ளவும், கருத்துகளைப் பதிவிடும் வசதியும் மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  அருகாமையிலுள்ள கழிப்பிடம் அமைந்துள்ள தொலைவு, அது ஆண்கள் அல்லது பெண்கள் பயன்படுத்தும் கழிவறையா,  சென்றடைய தேவைப்படும் நேரம் போன்ற அனைத்து விவரங்களும் பதிவிடப்பட்டுள்ளன.
கழிவறை குறித்த கருத்துப் பதிவிடும் வசதி : ஒவ்வொரு கழிப்பிடத்திலும் ஒரு  பொத்தான்  வைக்கப்பட்டிருக்கிறது. அதில்  கழிவறையின் பராமரிப்பு மிகவும் மோசம், நன்று, மிகவும் நன்று என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டு மக்கள் தங்கள் கருத்தை அறியும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களிடம் பெறும் கருத்தின் அடிப்படையில் குறைகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.


சிறந்த பராமரிப்பாளர்களுக்கு பரிசு!
திருச்சி மாநகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்துக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்   இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை. இவர்  தூய்மை  இந்தியா திட்ட நிகழ்ச்சிக்காக திருச்சி வந்த போது, கழிப்பிடங்களை சிறந்த முறையில் பராமரிப்பவர்களுக்குப் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தார். மற்ற தூதுவர்கள் போல அதிகளவில் விழிப்புணர்வு பணியில் பங்கேற்க முடியாவிட்டாலும்,  செயற்கைக்கோள் வாயிலாக திருச்சி மாநகரத்திலுள்ள கழிப்பிடங்களின் பராமரிப்பு குறித்து கண்காணிப்பு, சிறப்பாகப் பராமரிப்பு குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்திருப்பதால், மாநகராட்சி இப்பணியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com