சம்பா அறுவடையால் வைக்கோல் விலை சரிவு!

காவிரி, டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை காரணமாக வைக்கோல் உற்பத்தியும் அதிகரித்து, அதன் விலையும் சரிந்துள்ளது.

காவிரி, டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை காரணமாக வைக்கோல் உற்பத்தியும் அதிகரித்து, அதன் விலையும் சரிந்துள்ளது. விலை சரிவால் விவசாயிகளுக்கு சற்று வருத்தம் இருந்தாலும் தமிழக கால்நடைகளுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தீவனத் தட்டுப்பாடு இருக்காது என மகிழ்ச்சியடைந்துள்ளர். 
தமிழகத்தில் 88.14 லட்சம் பசு இனங்களும், 7.81 லட்சம் எருமையினங்களும் உள்ளன. இவைத்தவிர பசு, எருமைக்கன்றுகள் ஒரு லட்சத்துக்கும் மேல் உள்ளன. கால்நடைகளுக்கு பசுந் தீவனத்தைத் தவிர்த்து உலர் தீவனமாக வைக்கோலும் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. நெல் அறுவடை செய்யும் வயல்களில் வைக்கோல் கிடைக்கிறது.
தமிழகத்தைப் பொருத்தமட்டில் காவிரி, டெல்டா மாவட்டங்களில்தான் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுவதால் வைக்கோல் தேவைக்கும் இந்த மாவட்டங்களையே தமிழகத்தின் பிற மாவட்டங்களும் நம்பியிருக்க வேண்டியுள்ளது. 
வைக்கோல் உற்பத்தி அதிகரிப்பு: காவிரி, டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 15 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இந்தாண்டு காவிரியில் தாமதமாக தண்ணீர் திறந்ததால் சம்பா சாகுபடியும் தாமதமாகவே தொடங்கியது. பெரும்பாலான பகுதிகளில் நவம்பர் இறுதி வரை நடவு பணிகள் நடைபெற்றன. பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் இருந்து சம்பா அறுவடை தீவிரமாகியுள்ளது. தாமதமாக நடவு செய்த பகுதிகளிலும், விதைத்த பகுதிகளிலும் அறுவடை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால், வைக்கோல் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு வறட்சி காரணமாக தீவனத்தட்டுப்பாடு இருந்தது. இதனால், வைக்கோல் விலை ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் வரை விலை போனது. சிறிய வைக்கோல் கட்டு ரூ.200 எனவும், பெரிய வைக்கோல் கட்டு ரூ.300 எனவும் விலை போனது.
ரூ.55.71 கோடி ஒதுக்கீடு: கால்நடைகளுக்கு தீவனத்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 300 இடங்களில் தீவனக் கிடங்கு, விற்பனை மையங்களும் தொடங்கப்பட்டன. திருச்சியில் 7 இடங்களில் தொடங்கப்பட்டது. அதிகபட்சமாக விழுப்புரத்தில் 26, திருவண்ணாமலையில் 22, சேலத்தில் 20, திருநெல்வேலியில் 15 இடங்களில் தீவனக் கிடங்குகள் அமைத்து கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வைக்கோல் வழங்கப்பட்டது. இதற்காக ரூ.55.71 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது.
இதன்படி, கொள்முதல் செய்த வைக்கோலை விவசாயிகளுக்கு மானிய விலையில் கிலோ ரூ.2-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு மாட்டுக்கு 3 கிலோ வீதம் அதிகபட்சம் 5 மாடுகளுக்கு என வைக்கோல் வழங்கப்பட்டது. 5 மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வாரத்துக்கு 105 கிலோ வைக்கோல் வழங்கப்பட்டது. இதன் மூலம் 14.10 லட்சம் கால்நடைகளுக்கு 2.66 கோடி கிலோ வைக்கோல் வழங்கப்பட்டது.
தீவனத் தட்டுப்பாடு இருக்காது: இப்போது, காவிரி, டெல்டா பகுதிகளில் 10 லட்சம் ஏக்கருக்கு மேல் வைக்கோல் அறுவடையும் நடைபெற்று வருவதால் இந்தாண்டு கால்நடைகளுக்கு தீவனத்தட்டுப்பாடு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அறுவை வயல்களுக்கு வியாபாரிகளும், கால்நடை வளர்ப்போரும் நேரில் வருகை தந்து வைக்கோலை பெற்றுச் செல்கின்றனர். இவைத்தவிர, விவசாயிகளே வைக்கோலை அறுவடை செய்து கிடங்கில் சேமித்து வைத்து விற்பனை செய்கின்றனர்.
விலைகுறைந்தாலும் மகிழ்ச்சி: இதுதொடர்பாக, மருதூரைச் சேர்ந்த விவசாயி ஆனந்த் கூறியது: கடந்தாண்டு வறட்சி காரணமாக தீவனத்தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரு ஏக்கர் வைக்கோல் ரூ.13 ஆயிரம் வரை விலைபோனது. இப்போது 10 லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா அறுவடை முடிந்து வைக்கோல் அறுவடையும் செய்யப்பட்டுள்ளது. இதனால், விலை குறைந்துள்ளது. ஒரு ஏக்கர் ரூ.3 ஆயிரத்துக்கு விலைபோகிறது. சிறிய கட்டு வைக்கோல் ரூ.90-க்கும், பெரிய கட்டு வைக்கோல் ரூ.110-க்கும் நெல் வயல்களில் நேரடியாக விற்பனையாகிறது. வேறு பகுதிக்கு அனுப்ப வேண்டுமெனில் போக்குவரத்து செலவு, ஆள்கள் கூலி ஆகியவை சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது.
 விலை குறைந்தாலும் கால்நடைகளுக்கு தட்டுப்பாடின்றி தீவனம் கிடைக்கும் என்பது மகிழ்ச்சிக்குரியது. உலர் தீவனமான வைக்கோல் மட்டுமின்றி பசுந்த தீவன சாகுபடியும் நடப்பாண்டு அதிகரித்துள்ளது என்றார்.
உலர்தீவன கிடங்குகள்: கால்நடைப் பாரமரிப்புத்துறை வட்டாரத்தினர் கூறுகையில், தீவனத்தட்டுப்பாடு இருந்தால் திருச்சி மாவட்டத்தில் முசிறி வட்டம், தண்டலைப்புத்தூர், ஜடமங்கலம், துறையூர் வட்டம் நாகலாபுரம், ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம், மருங்காபுரி வட்டம் வளநாடு, மணப்பாறை வட்டம் மணப்பாறை, மண்ணச்சநல்லூர் வட்டம் மண்ணச்சநல்லூர் ஆகிய 7 கால்நடை மருந்தகங்களிலும் உலர்தீவன கிடங்குகள் அமைக்கப்படும். இந்தாண்டு சம்பா அறுவடையால் வைக்கோல் வரத்து அதிகரித்துள்ளதால் குறைந்தபட்சம் 4 மாதங்களுக்கு தீவனத்தட்டுப்பாடு இருக்காது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com