போராட்டத்தில் ஈடுபட்டோரின் ஜாமீனுக்கு எதிர்ப்புக் கூடாது: எஸ்.பி.யிடம் அரசியல் கட்சியினர் முறையீடு

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததால் உஷா உயிரிழந்ததை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தின் போது

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததால் உஷா உயிரிழந்ததை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தின் போது  கைது செய்யப்பட்டோரின் ஜாமீன் மனு விசாரணையின் போது, காவல்துறை சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கக் கூடாது என அரசியல் கட்சியினர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து முறையிட்டனர்.
திருவெறும்பூர் பெல் ரவுண்டானா பகுதியில்  வாகனத் தணிக்கையின் போது நிறுத்தாமல் சென்றதாகக் கூறி ராஜா என்பவரின் மோட்டார் சைக்கிளை காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில்,  உஷா என்ற பெண் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் தொடர்பாக போலீஸார் 29 பேரை கைது செய்தனர். அவர்களில் 2 பேர் மாணவர் என்பதால் விடுவிக்கப்பட்டனர். மற்ற 27 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இவர்கள் ஜாமீன் மீதான மனு திருச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வர உள்ள நிலையில், காவல்துறை சார்பில் ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கக்கூடாது எனக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டத் துணைச் செயலர் சுரேஷ், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலர்  கோ. சங்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மக்கள் அதிகார அமைப்பினர் செவ்வாய்க்கிழமை திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர் ( சட்டம் மற்றும் ஒழுங்கு) எஸ். சக்திகணேசனை சந்தித்து பேசினர்.   வழக்கு விசாரணை அனைத்தும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பொறுப்புக்குள்பட்டதால் தன்னால் ஒன்றும் செய்ய இயலாது எனக் கூறி திருப்பி அனுப்பியுள்ளார்.இதைத் தொடர்ந்து, மாலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபாஷ் கல்யாணை குழுவினர் சந்தித்த போது, வழக்கு விசாரணையை டி.எஸ்.பி. புகழேந்தி மேற்கொள்வதால், அனைத்து ஆவணங்களும் அவரிடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதால்,  நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது ஆட்சேபனை தெரிவிக்காமல் இருக்க முடியாது எனக் கூறினாராம். ஆனாலும், குழுவினர்  அவரிடம் வலியுறுத்தி வந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com