மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

புதுக்கோட்டை மாவட்டம்,  இலுப்பூர் அருகே சாலை விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம்,  இலுப்பூர் அருகே சாலை விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகிலுள்ள மலைக்குடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குருநாதன். இவரது மனைவி  ஜானகி (36).  கடந்த 6 ஆம் தேதி இலுப்பூரிலிருந்து மலைக்குடிப்பட்டிக்குச் செல்வதற்காக அந்தவழியாக வந்த இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்ற போது  இருதரப்பட்டி பகுதியில் எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியதில் ஜானகி பலத்த காயமடைந்தார்.
தொடர்ந்து இலுப்பூர், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜானகி, பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மார்ச் 11 ஆம் தேதி இரவு அந்த மருத்துவமனையில் இருந்த அவர்,  திங்கள்கிழமை தில்லைநகர் பகுதியிலுள்ள சிதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்தனர்.
இதையடுத்து ஜானகியின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்குவதற்கு அவரது கணவர் குருநாதன், தந்தை சண்முகம் ஆகியோர் முன்வந்தனர். இதைத் தொடர்ந்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுஉரிய அனுமதி பெறப்பட்ட நிலையில் ஜானகியின் கல்லீரல், சிறுநீரகம், கண்கள், நுரையீரல் மற்றும் இதயம் ஆகிய உறுப்புகள் சிதார் மருத்துவமனையில் தானமாகக் கொடுக்கப்பட்டது.
கல்லீரல் சிதார் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும்,  இதயம் மற்றும் நுரையீரல் சென்னையிலுள்ள 2 தனியார் மருத்துவமனைகளுக்கும்,  சிறுநீரகங்கள் இரண்டு திருச்சியிலுள்ள 2 மருத்துவமனைகளுக்கும், கண்கள் இரண்டும் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை கண் வங்கிக்கும் தானமாக அளிக்கப்பட்டது.
சென்னைக்கு  நுரையீரல், இதயம் ஆகிய உறுப்புகளைக் கொண்டு செல்வதற்காக சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் மருத்துவக் குழுவினர் திருச்சி வந்தனர்.  உடல் உறுப்புகளை எடுத்துச் செல்லும் போது  ஆம்புலன்ஸ் வாகனம் அதிவிரைவாக செல்வதற்காக குறிப்பிட்ட வழித்தடத்தில் போக்குவரத்தில் சிறிது நேரம் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கான பணியை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர். குறிப்பிட்ட நேரத்துக்குள் மருத்துவக் குழுவினர் விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் இதயம் மற்றும் நுரையீரலை கொண்டு சென்றனர்.
மூளைச்சாவு அடைந்த ஜானகிக்கு  ஆர்த்திகா (11), நந்தினி (10), பவானி (9), நாகம்மாள் (7) ஆகிய 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.  விபத்தில் தன் மனைவி மூளைச்சாவு அடைந்தாலும் அவரால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கிறது என்றார் ஜானகியின் கணவர் குருநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com