சிலை கடத்தல் வழக்கு: கோவையை சேர்ந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கோவை மாவட்டம் துடியலூர் அருகே ஜக்கம நாயக்கன்பாளையம் ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோயிலில் ஐம்பொன்சிலைகள் திருடிய வழக்கில்

கோவை மாவட்டம் துடியலூர் அருகே ஜக்கம நாயக்கன்பாளையம் ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோயிலில் ஐம்பொன்சிலைகள் திருடிய வழக்கில் கோவையைச் சேர்ந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியிருப்பது : கோவை மாவட்டம் துடியலூர் காவல் சரகம், ஜக்கமநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோயிலில் கடந்த 2015 மே 13 ஆம் தேதி,  நரசிம்மபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீநாமகிரி தாயார் ஆகிய 4 ஐம்பொன்  சிலைகள் திருடுபோனது. 
இது குறித்து  துடியலூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.  இதில், கோவை மாவட்டம் வள்ளமடை அருகேயுள்ள காளிபாளையத்தைச் சேர்ந்த  நா. செந்தில் என்கிற பால்கார செந்தில் (44),  . மலுமிச்சம்பாளையம் ஓக்கிலிபாளையம் சாஸ்திரி வீதியைச் சேர்ந்த கா. சண்முகம் (48)  ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 சிலைகளும்  மீட்கப்பட்டன.  பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இது தொடர்பாக கோவை மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர்மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நிலுவையில் இருந்தது.  
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு  விசாரணை நடத்தியது. இதற்காக  வழக்கு,  கோவையிலிருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு மாற்றப்பட்டது. 
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணையை தொடர்ந்து இருதரப்பு வாதங்கள் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. இதில்,  சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஆதாரங்களை முன்வைத்து குற்றத்தை நிரூபித்ததை அடுத்து,  செந்தில் என்கிற பால்கார செந்திலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து , கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் தீர்ப்பு அளித்தார். இதையடுத்து செந்தில்  கோவை சிறையில் அடைக்கப்பட்டார். 
இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொருவர் காளிமுத்துவுக்கு  பிடிஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அவரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
விசாரணையில், ஈடுபட்ட  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு  துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், கருணாகரன், காவல் ஆய்வாளர்கள்  கார்த்திகேயன், சங்கீதா மற்றும் உதவி ஆய்வாளர் வள்ளி உள்ளிட்டோரை ஜ.ஜி. பொன். மாணிக்கவேல் பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com