சர்கார் பட விவகாரம்: பேனர்களை கிழித்து அதிமுகவினர் போராட்டம்

நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகியுள்ள சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள்

நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகியுள்ள சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதை நீக்கவும், ஆளும் அரசுக்கு எதிராக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்து படத்தின் பேனர்களை அதிமுகவினர் வியாழக்கிழமை கிழித்து போராட்டத்தில்  ஈடுபட்டனர்.
திருச்சி மத்திய பேருந்துநிலையம், சத்திரம் பேருந்துநிலையம், கண்டோன்மென்ட் பகுதிகளில் உள்ள 7 திரையரங்குகளில் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தந்தப் பகுதி காவல்நிலையங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தலைமையில் திரையரங்குகளுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்தியப் பேருந்துநிலைய பகுதியில் அரசுப் போக்குவரத்து பணிமனை அருகேயுள்ள திரையரங்கு முன் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஏராளமான அதிமுகவினர் கூடினர். அப்போது,  7 மணி காட்சிக்காக வந்தவர்கள் பாதுகாப்புடன் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், திரையரங்கு முன்பு அதிமுகவினர் கூடிய வண்ணம் இருந்தனர். முன்னெச்சரிக்கையாக உதவி ஆணையர்கள் சிகாமணி, அருணாசலம் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் என 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
திரையரங்கு முன்பாக ரசிகர்கள் வைத்திருந்த பேனர்களை  அகற்றி திரையரங்க வளாகத்துக்குள் கொண்டு போகச் செய்தனர்.
இருப்பினும், நுழைவு வாயில் முன்பாக கட்டப்பட்டிருந்த கட்-அவுட் மற்றும் பேனர்களை கிழித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலைக்கு வந்து சர்கார் திரைப்படத்தின் தயாரிப்பாளர், நடிகர்கள், இயக்குநர் ஆகியோரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கவும், ஆளும் அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் காட்சிகளை வடிவமைத்த திரைப்பட இயக்குநரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அதிமுகவினரை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
இதேபோல், சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள இரு திரையரங்குகளின் வெளியே அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துறையூரில் 2 பேர் மீது வழக்கு:
துறையூர் தெற்கு ரத வீதியில் உள்ள ஒரு திரையரங்கில் தீபாவளியன்று விஜய் நடித்த சர்கார் படம் திரையிடப்பட்டது. இதையொட்டி, பேருந்து நிலையம், பாலக்கரை, மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் விஜய் ரசிகர்கள் விளம்பரப் பதாகைகள் வைத்தனர். இதில் மார்க்கெட் பகுதியிலும், பேருந்து நிலையம் அம்மா உணவகம் அருகேயும் அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறாக விளம்பரப் பதாகை வைத்த கருணாநிதி மகன் மோகன்(24) உள்ளிட்ட இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com