கடந்த 7 ஆண்டுகளில் 31.82 லட்சம் பேருக்கு ரூ.974.68 கோடி உதவி: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தகவல்

தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் 31.82 லட்சம் பேருக்கு ரூ.974.68 கோடி உதவித் தொகை

தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் 31.82 லட்சம் பேருக்கு ரூ.974.68 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் பதிவு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் நிலோபர் கபில் பேசியது: சிறுவயதிலேயே பசியின் கொடுமையை அறிந்தவர் எம்ஜிஆர் என்பதாலேயே, முதல்வராக வந்தவுடன் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். இதேபோல, தொழிலாளர்கள் நலனுக்காக தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் சட்டத்தை கொண்டு வந்தார். அவரது வழியில் வந்த மறைந்த முதல்வர் ஜெயலிலதாவும் நலவாரியங்களை விரிவுபடுத்தி, உதவித் தொகைகளையும் உயர்த்தி வழங்கினார்.
ஜெயலலிதாவின் வழியில் நடைபெறும் அதிமுக அரசானது நிலுவையில் இருந்த உதவித் தொகை விண்ணப்பங்களுக்கு ஒரே தவணையில் ரூ.60 கோடியை ஒதுக்கியது. வாரியங்கள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 71 லட்சத்து 59 ஆயிரம் பேர் பதிவு செய்து சுமார் 46 லட்சம் பேருக்கு ரூ.1,332 கோடியே 29 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில், கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் தொடர்ந்து 31.82 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.974 கோடியே 68 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மட்டும் கடந்த 7 ஆண்டுகளில் 95 ஆயிரம் பேர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ளனர். இதில், 84 ஆயிரம் பேருக்கு ரூ.19.68 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது, கட்டுமான பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 25 ஆயிரம் பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.5 கோடி மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. இதுமட்டுமின்றி இயற்கை மரண உதவித் தொகை ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும், ஈமச்சடங்கு உதவி ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.400லிருந்து 500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி பேசியது: 1999இல் உடல் உழைப்புத் தொழிலாளர் நலவாரியம் ஏற்படுத்தப்பட்டது. 18 வயது பூர்த்தியான மற்றும் 60 வயதுக்குள்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் இதில், பதிவு செய்து வருகின்றனர். 
53 வகையான கட்டுமானத் தொழில்கள், 69 வகையான அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்காக 17 நல வாரியங்கள் இயங்கி வருகின்றன. வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கும் இந்த வாரியங்களில் உதவித் தொகை வழங்கப்படுகிறது என்றார் அவர்.
தொழிலாளர் நலத் துறை ஆணையர் இரா. நந்தகோபால் பேசுகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து கட்டுமானத் தொழிலில் ஈடுபடுவோருக்காக தையூரிலும், எழுச்சூரிலும் அனைத்து வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகள் ரூ.32 கோடியில் கட்டி திறக்கப்பட்டுள்ளன. இதனை கட்டுமானத் தொழிலாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், 982 பயனாளிகளுக்கு ரூ.24.13 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
ஆட்சியர் கு.ராசாமணி, மாநிலங்களவை உறுப்பினர் டி. ரத்தினவேல், பெரம்பலூர் எம்பி ஆர்.பி. மருதராஜா, எம்எல்ஏ-க்கள் எம். செல்வராஜ், எம். பரமேஸ்வரி, கூடுதல் தொழிலாளர் ஆணையர் லட்சுமிகாந்தன், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் நலவாரிய செயலர் தங்கவேல், கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய செயலர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com