திருச்சி விமான நிலைய  விபத்து: ஓடுதளம் நீட்டிப்பதில் தாமதமே விபத்துக்கான முக்கியக் காரணம்?

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விமான விபத்துக்கு ஓடுதளம் நீட்டிப்புக் குறைவு முக்கிய காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விமான விபத்துக்கு ஓடுதளம் நீட்டிப்புக் குறைவு முக்கிய காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருச்சி விமான நிலைய ஓடுதளம் ஏற்கெனவே சுமார் 6,000 அடி நீளத்திலிருந்து 8,136 அடியாக கடந்த 2006ஆம் ஆண்டு நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் ஓடுதளத்தை நீட்டிக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஆனாலும் நிலம் கையகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு தடைகளால் நீட்டிப்பு பணி கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக கிடப்பில் உள்ளது.
இதுதொடர்பாக விமான நிலைய ஆலோசனைக் குழு பலமுறை கூட்டம் கூடி ஆலோசனை செய்தும், அரசுத் தரப்பில் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்துவதே சவாலாக உள்ளது. அடுத்தபடியாக விவசாய நிலம், தரிசு நிலம் உள்ளிட்டவற்றையும் கையகப்படுத்த வேண்டியுள்ளதால், ஓடுதளம் நீட்டிப்பை செயலுக்கு கொண்டு வர முடியவில்லை.
சர்வதேச விமான நிலைய ஓடுதளம் பெரும்பாலும் குறைந்த பட்சம் 10,000 அடி நீளத்துக்காவது இருக்க வேண்டியது அவசியம் என்கின்றது விமான போக்குவரத்து துறை. ஆனால் 8, 136 அடி நீளத்தில் திருச்சி விமான நிலைய ஓடுதளம் இருப்பதால் பெரிய வகை விமானங்களை இயக்குவது சற்று சாமார்த்தியமான செயலாகவே உள்ளது. என்றாலும் தற்போது விபத்துக்குள்ளான போயிங் 737 ரக விமானங்கள் இதுவரை எந்தப் பிரச்னையுமின்றி இயக்கப்பட்டு வந்தன. 
ஆனால் சற்றுக் கவனக்குறைவு ஏற்பட்டாலும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படும் என்பதை இச் சம்பவம் தெளிவுபடுத்தியுள்ளது.
10 ஆயிரம் அடிக்கு அதிகமாக ஓடுதளம் இருக்கும்பட்சத்தில் இதுபோல சுற்றுச்சுவர் அருகே வந்து மேலெழும்ப வேண்டிய அவசியம் இருக்காது. 
சில நொடி தாமதம் ஆனாலும் விபத்து  தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.  எனவே ஓடுதளத்தை இனியாவது நீட்டிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கை. இதுகுறித்த கேள்விகளுக்கு விமான நிலைய இயக்குநர் மற்றும் ஆலோசனைக் குழு தரப்பிலும் சரியான பதில் அளிக்கப்படவில்லை. 


சரக்கு போக்குவரத்தும் பாதிப்பு 
திருச்சி விமான நிலையத்தில் சரக்கு முனையம் செயல்படும் நிலையில், ஓடுதளம் குறைவான நீளத்தில் உள்ளதால், பயணிகள் விமானங்கள் மூலமாக மட்டுமே சரக்குப் போக்குவரத்து நடைபெறுகிறது. அதற்கென பிரத்யேக விமானங்கள் இயக்கப்படாமைக்கு ஓடுதள நீட்டிப்பு பிரச்னை முக்கியக் காரணமாகும். 
தில்லி விமான நிலையம் 13, 534 அடியும் அமிர்தசரஸ் 12,001 அடியும் நீள ஓடுதளத்தைக் கொண்டுள்ளன.  ஓடுதளம் நீட்டிக்கப்படும் நிலையில், 
சரக்குப் போக்குவரத்துக்கென பெரியளவிலான பிரத்யேக விமானங்கள் இயக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com