திருச்சியில் அக்.21இல் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்

திருச்சியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது.

திருச்சியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து டாக்டர் கே.சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மருத்துவர் கே. கோவிந்தராஜ் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
இந்தியாவில் பெண்களிடையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முதன்மையான நோயாக இருந்து வந்த நிலையில்,   கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் மார்பக புற்றுநோய் அதையும் தாண்டி இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பெண்களிடையே முதன்மையான புற்றுநோயாக மாறியுள்ளது.  இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் பேருக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களில் 1.75 லட்சம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 75,000 முதல் 80,000 பேர் வரை இறக்கும் நிலை ஏற்படுகிறது.
மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அறக்கட்டளையைத் தொடங்கிய நாங்கள், அதற்கான விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறோம். அக்டோபர் மாதம், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடிக்கப்படுவதால், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறோம்.  
நிகழாண்டில் முதல் நிகழ்ச்சியாக கடந்த 7 ஆம் தேதி நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், சனிக்கிழமை ( அக்.13)  சுகிசிவம்  தலைமையில் விழிப்புணர்வுப் பட்டிமன்றம் தில்லைநகர் கி.ஆ.பெ.விசுநாதம் பள்ளியில் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
எங்கள் அறக்கட்டளை,  ஜி. விசுவநாதன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சிபிசிசி கேன்சர் சென்டர்,  ஸ்ரீரங்கம் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து நடத்தும்   விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் எனப்படும் மேமோ ரன் 5,10, 21.1 கி.மீ. தொலைவு என 3 பிரிவுகளில் அக். 21 - இல் நடைபெறுகிறது. 5 கி.மீ. ஓட்டம்  மாம்பழச்சாலை டாக்டர் ஜி.வி.என். ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தொடங்கி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுநாதம் பள்ளி மைதானத்தில் நிறைவடையும்.  10, 21.1 கி.மீ. ஓட்டம் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து காலை 5 மணிக்கு தொடகி, சித்திரை வீதிகள்,அம்மாமண்டபம், காவிரியாறு,  சத்திரம் பேருந்து நிலையம்,  சாஸ்திரி சாலை, நீதிமன்றம் வழியாக அண்ணா விளையாட்டரங்கப் பகுதியைச் சுற்றிவிட்டு  மீண்டும் உழவர்சந்தை, தில்லைநகர் வழியாக கி.ஆ.பெ. மேல்நிலைப் பள்ளியில் நிறைவடையும் வகையிலும், 10 கி.மீ. ஓட்டம் ஸ்ரீரங்கம் பள்ளியில் தொடங்கி இதே வழித்திடத்தில் சாஸ்திரி சாலை வழியாக தில்லைநகர் 11 ஆவது குறுக்குச்சாலை வழியாகச் சென்று பள்ளியில் நிறைவடையும் வகையிலும் வழித்தடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
10, 21.1 கி.மீ. ஓட்டத்தில் பங்கேற்பவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். அனைத்துப் பிரிவுகளிலும் சேர்த்து சுமார் 10,000 பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.  நிகழாண்டில் அனைத்துப் பிரிவுகளிலும் இலவசமாக அனுமதிக்கப்படுவர். மாவட்ட தடகள சங்கத்தினர் போட்டிக்கான கண்காணிப்புப் பணியை மேற்கொள்வர். வீரர்களுக்கு டைமிங் மேட் அணிவிக்கப்படும். 
இதன் மூலம் அவர்களின் பந்தயத் தொலைவு கடக்கும் நேரத்தை கணக்கிடலாம்.  மாரத்தான் ஓட்டத்தை திரைப்பட நடிகை ரைசா வில்சன் தொடக்கி வைக்கிறார். 
போட்டியில் பங்கேற்பவர்கள்  www.breastcancerfoundation.in / www.mammorun.com / www.sbcfmammorun.com.  ஆகிய இணையதளங்களில் அக். 18 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார் கோவிந்தராஜ்.
பேட்டியின் போது, அறக்கட்டளைச் செயலர் மருத்துவர் கே.என்.சீனிவாசன், துணைத் தலைவர் ஜவஹர் நாகசுந்தரம்,  மாவட்ட தடகளச் சங்கத்தின் ராஜூ, நீலமேகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com