திருச்சி அருகே சோழர் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருச்சி மாவட்டம், உத்தமர்சீலி கயிலாசநாதர் திருக்கோயிலில் சோழர் காலக் கல்வெட்டும், நிலமளக்கப் பயன்பட்ட அளவுகோல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், உத்தமர்சீலி கயிலாசநாதர் திருக்கோயிலில் சோழர் காலக் கல்வெட்டும், நிலமளக்கப் பயன்பட்ட அளவுகோல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி டாக்டர் மா. ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய  இயக்குநர் மருத்துவர் இரா. கலைக்கோவன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சியை அடுத்த  உத்தமர்சீலியில் உள்ள கயிலாசநாதர் கோயிலில்  முசிறி அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியை முனைவர் அர. அகிலா, திருச்சி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி  வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் மு. நளினி ஆகியோர் அண்மையில் நடத்திய கள ஆய்வில் சோழர் காலக் கல்வெட்டு, அக்காலத்தே நிலமளக்கப் பயன்படுத்திய அளவுகோலை  கண்டறிந்தனர்.இந்த ஆய்வின் மூலம்  1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர் காலத் தோரணச் சிற்பங்கள் வரலாற்று வெளிச்சத்துக்கு வந்துள்ளன. 
இரண்டு சோழர் கட்டுமானங்களிலும் உள்ள 5 கோட்டங்களின் மேல் காட்டப்பட்டுள்ள மகர  தோரணங்களில் இச்சிற்றுருவச் சிற்பங்கள் பொலிகின்றன. அவற்றுள் மகிடாசுரமர்த்தினி வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டக் கோயில்களில் வேறெங்கும் இத்தகு அமைப்பில் மகிடாசுரமர்த்தினியைத் தோரணச் சிற்பமாகக் காண முடிவதில்லை. 
மேலும், கோயிலின் முகமண்டபத்தின் தெற்குத் தாங்குதளத்தில் கண்டறியப்பட்ட சோழர் கால அளவுகோல், இரண்டு கூட்டல்குறிகளுக்கிடையே 1.64 மீ. நீளமுள்ளதாக உள்ளது. இத்தகைய அளவுகோல் நன்செய், புன்செய் நிலங்களை அளப்பதற்குப் பயன்பட்டன. 
இறையகத்தின் தெற்குத் தாங்குதளத்தில்பெரிதும் சிதைந்த நிலையில் காணப்படும்  விக்கிரமசோழரின் (1118-1136) கல்வெட்டு இக்கோயில் இறைவன் முன் திருவிளக்கேற்றக் கொடையாளி ஒருவர் கோயில் சிவபிராமணர்களிடம் 10 காசுகள் அளித்ததைத் தெரிவிக்கிறது.  கல்வெட்டுச் சிதைவினால் கொடையாளியின்பெயரை அறியக்கூடவில்லை.
கொடையைப் பெற்றுக்கொண்ட கோயிலார் அதை வைப்புநிதியாகக் கொண்டு,  அதன்வழிக் கிடைக்கும் வட்டியால் நாளும் நெய் கொண்டு அக்கோயிலில் விளக்கேற்றஇசைந்தனர். இதில் ஒப்பந்த ஆவணத்தைக் கோயிலில் கல்வெட்டாகப் பொறிக்க கௌசிகன்  என்பவர் ஏற்பாடு செய்தார். இறைவழிபாடு நிகழ்த்துபவர்களே இவ்விளக்கை ஏற்ற வேண்டும் என்பது கொடையாளியின்வேண்டுகோளாக அமைந்தது.
உத்தமசீலிக்கு அருகிலுள்ள திருப்பாலைத்துறை ஆதிமூலேசுவரர் கோயிலில் காணப்படும் விக்கிரமசோழரின் 7 கல்வெட்டுகளும் அக்கோயிலின் நந்தாவிளக்கு, சந்திவிளக்கு, திருவிளக்கு, பகல்விளக்கு என பல்வகை விளக்குகளையேற்ற அளிக்கப்பட்ட கொடைகளைப் பற்றியே பேசுகின்றன.  இவ்விளக்குகளுக்கான கொடைகள் கோயிலார் பொறுப்பில் ஏற்கப்பட்டு வழிபாடு செய்பவர்களால் உரியவாறு நிறைவேற்றப்பட்டன. இப்புதிய கண்டுபிடிப்புகள் குறித்த தகவல் தொல்லியல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com