மக்களவைத் தேர்தல் அணுகுமுறை: சென்னையில் அக்.26-இல் விவசாய சங்கத் தலைவர்கள் விவாதிக்க முடிவு

மக்களவைத் தேர்தல் அணுகுமுறை குறித்து சென்னையில் அக்டோபர் 26 இல்  அனைத்து விவசாயச் சங்கத் தலைவர்கள்

மக்களவைத் தேர்தல் அணுகுமுறை குறித்து சென்னையில் அக்டோபர் 26 இல்  அனைத்து விவசாயச் சங்கத் தலைவர்கள் கூடி விவாதிக்க உள்ளோம் என்றார் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கான திட்டங்கள் எதனையும் நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டனர். நீர் ஆதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும்  அரசுதவறி விட்டது.
முடிவுக்கு வந்து உச்ச நீதிமன்றமே உறுதி செய்து மாநிலங்கள் ஏற்றுக்கொண்டு செயல்பாட்டில் உள்ளநதி நீர்ப் பிரச்னைகளை மீண்டும் முதல்வர்களை உள்ளடக்கிய புதிய நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க புதிய சட்டம் என்ற பெயரில் அரசியலாக்க முயற்சி செய்து வருகிறது.காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திட வலியுறுத்தும் நிலையில் அதையும் ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. அதே நேரத்தில் பாதுகாக்கப்பட்ட பெட்ரோலிய  ரசாயண மண்டலமாக அறிவித்து, ரிலையன்ஸ், வேதாந்தா போன்ற  பெரும் நிறுவனங்களுக்கும், ஓஎன்ஜிசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பாறை எரிவாயு, கச்சா நிலக்கரி எடுத்துக் கொள்ளவும் மத்தியஅரசு அனுமதி வழங்கியிருக்கிறது. 
இந்நிலையில்தான்,  மக்களவைத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக சென்னையில் அக்டோபர் 26 ஆம் தேதி அனைத்து விவசாயச் சங்கத் தலைவர்களும் கூடி பேச உள்ளோம். விவசாயிகளைப் பாதுகாப்பதற்கான வகையில் தேர்தல் அணுகுமுறையை வகுக்க உள்ளோம் என்றார் பாண்டியன். பேட்டியின் போது, குழுவின் மாநில கௌரவத் தலைவர் தீட்சிதர் பாலசுப்பிரமணியம்,  உயர்நிலை ஆலோசகர் புலியூர் ஏ.நாகராஜன், திருச்சி மாட்டச் செயலர் ஹேமநாதன், மண்டலத் தலைவர் கே.சி.ஆறுமுகம், வயலூர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com