மத்திய, மாநில அரசுகளை வீழ்த்த மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிகளை வீழ்த்திட மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிகளை வீழ்த்திட மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது: இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் சம உரிமை பெற்றவர்கள்தான். பன்முக கலாசாரமே இந்திய நாட்டின் சிறப்பாகும்.  வேற்றுமையில் ஒற்றுமைக் காணும் இந்த நாட்டில்தான், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே உணவு என்பதை கூறி அகன்ற பாரதத்தை கொண்டு வர துடிக்கிறார்கள். இறைவன் கொண்டு வந்த முத்தலாக் சட்டத்தை அகற்ற மோடியால் முடியாது என்ற நிலை வரும்.  தமிழகத்திலும், மத்தியிலும் இந்த ஆட்சிகள் தூக்கியெறியப்பட லேண்டும். இதற்கு மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் இருந்தாலும் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளை ஒடுக்கும் கட்சியாக எஸ்பிடிஐ திகழ்கிறது. மதத்தால், ஜாதியால், மொழியால் மக்களைப் பிரித்து அரசியல் நடத்தி வருபவர்களை வீழ்த்திட, மத்திய, மாநில அரசுகளை அகற்றிட, காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக போன்ற மதசார்பற்ற அணிகளுடன்  எஸ்டிபிஐ கட்சி இணைந்து பணியாற்றிட வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்: இஸ்லாமியர்களோ, தலித்களோ ஒரு கட்சியின் தலைவராக முடியும். ஆனால், உத்தரப்பிரதேசத்தைத் தவிர வேறு எந்த மாநிலங்களும் முதல்வராகக்கூட முடியாது. அதுபோல, பிரதமராகவும் முடியாது.  தலித்துகள், இஸ்லாமியர்கள் என தனிமைப்படுத்திக் கொண்டால் தேசிய நீரோட்டத்தில் இணைய முடியாது.   பா.ஜ.க, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் சனாதன தர்மத்தை ஆதரிப்பதால் அவர்களை எதிர்க்கிறோம். எக்காரணத்தை கொண்டும் மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் வரக்கூடாது. இதைத் தடுக்க மதசார்பற்ற அணியில் எஸ்டிபிஐ கட்சி இணைய வேண்டும். 
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன்:   மதசார்பற்ற சமூகத்தை,  சமுதாயத்தை உருவாக்கும் வகையில்,  அறப் போராட்டத்துக்காகவும்,  வாழ்வுரிமைப் போராட்டத்துக்கும்  எஸ்பிடிஐ கட்சியின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும். 
எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி: ஒடுக்கப்பட்ட மற்றும் தலித், பழங்குடியின மக்களின் அரசியல் எழுச்சிக்காகப் போராடும் இயக்கமாக எஸ்பிடிஐ தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மத்தியில் உள்ள மோடி அரசு நம் எதிர்காலத்தை நாசமாக்க துடிக்கிறது.  நாங்கள் மதசார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படத் தயாராகத்தான் இருக்கிறோம். எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சீட்டுகளுக்காக யாரிடமும் கையேந்தும் நிலையில் நாங்கள் இல்லை. எங்களை மதிப்பவர்களுடன் நாங்கள் இணைந்து செயலாற்றத் தயாராகத்தான் உள்ளோம்.
எஸ்பிடிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்:  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த கட்சி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமல்லாது, விவசாயிகள், தலித், பழங்குடியின மக்கள் என எல்லோரின் விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டு, அவர்களுக்கான வழிகாட்டும் அமைப்பாக நாங்கள் திகழ்ந்து வருகிறோம்.   மத்தியில் பாசிசத்துடன் செயல்படும் அரசை வீழ்த்திட வேண்டும் என்றார் முபாரக்.
கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே. பைஜி, ஆரிய சமாஜத்தின் தலைவர் சுவாமி அக்னிவேஷ்,  அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன்  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநிலத் தலைவர் முகமது இஸ்மாயில், நாம் அமைப்பின் நிறுவனர் ம. ஜெகத் கஸ்பர்,   ஜமாஅத்துல் உலமா சபை முன்னாள் மாநிலப் பொதுச் செயலர் டி.ஜெ.எம். சலாஹுத்தின் ரியாஜி உள்ளிட்டோர் பேசினர்.
முன்னதாக,  மாநாட்டு சிறப்ப மலரை கட்சியின் தேசியப் பொதுச் செயலர் அப்துல் மஜித் வெளியிட அதை  கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  மாநிலப் பொருளாளர் வி.எம். அபுதாகீர் மாநாட்டு பிரகடனத்தை வாசித்தார். 
கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் அச. உமர்பாரூக், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ரபீக் அகமது உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் மாநாட்டில் பங்கேற்றனர். விழா நிகழ்வை அப்துல் ஹமீது தொகுத்தளித்தார்.
முன்னதாக, மாநிலப் பொதுச் செயலர் எம். நிஜாம் முஹைதீன் வரவேற்றார். மாநிலச் செயலர் எஸ். அமீர் ஹம்சா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com