கேரளத்துக்கு ரூ.18.83 லட்சம் வழங்கிய பாரதிதாசன் பல்கலைக்கழகம்

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த மாநில மக்களுக்கு உதவிடும் வகையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் ரூ.18.83 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. 

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த மாநில மக்களுக்கு உதவிடும் வகையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் ரூ.18.83 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. 
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துறைகளிலுள்ள ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருள்கள், போர்வைகள், ஆடைகள்,  நாப்கின்கள், பற்பசைகள், முதலுதவிக்குத் தேவையான மருந்துகள்,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான பொருள்கள்  கடந்த மாதம் 23 ஆம் தேதி பல்கலைக்கழகத் துணைவேந்தர் பெ.மணிசங்கர், பதிவாளர் கோபிநாத் முன்னிலையில் கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 
மேலும், கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியத் தொகை மற்றும் மாணவர்கள் கொடுத்த நிதி என அனைத்தையும் சேர்த்து ரூ.18.83 லட்சம்  கேரள மாநில முதல்வர் நிவாரண நிதியில் செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டதாக பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரில் பெருகிவரும் தெரு நாய்கள் தொல்லை!
திருச்சி, செப். 11 :  திருச்சியில் 7 வயது சிறுமியை தெருநாய் கடித்துக் குதறியதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் திருச்சி மாநகர் மட்டுமல்லாது, மாவட்டம் முழுவதும் பல இடங்களில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டம் கூட்டமாக...: திருச்சி மாநகரில் சுப்பிரமணியபுரம், கே,கே,நகர், விமான நிலையம், உறையூர், வயலூர் சாலை, கல்லுக்குழி, புத்தூர், பீமநகர், எடமலைப்பட்டிபுதூர், கிராப்பட்டி  என பல்வேறு இடங்களில் தெருநாய்கள் கூட்டம்கூட்டமாக திரிகின்றன.  இவைகள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக செல்வோரையும்,  பெண்கள், குழந்தைகளையும் கடிக்க முயல்கிறது. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் விரட்டிச் செல்வதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும்நிலை ஏற்படுகிறது.  கடந்த சில மாதங்களுக்கு முன் கல்லுக்குழி உலகநாதபுரம் பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்டோரை கடித்த நாய் அடித்துக் கொன்றனர்.


மௌனமாக  இருக்கும்  மாநகராட்சி...
இது குறித்து விமான நிலையப் பகுதியைச் சேர்ந்த சமூக  நல ஆர்வலர்  வீ. வாசுகி கூறுகையில், சர்வதேச அமைப்பான புளூகிராஸ் அமைப்பு நிர்வாகிகள் என ஏதேனும் உதவிக்கு அழைத்தால் திருச்சியில் அப்படியொரு அமைப்போ, அலுவலகமோ, நிர்வாகிகளோ இல்லை என்ற தவகல்தான் கிடைக்கிறது. ஆனால், அதற்கு புகார்கூற மட்டும் (இணையதளத்தின் கருணையால்) ஏராளமானோர் உள்ளதாக தெரிகிறது. அப்படியிருக்க தெரு நாய்களையும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்த வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் புளூ கிராஸ் அமைப்பின் பெயரைக் கூறி தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டிய மாநகராட்சி மௌனமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. இதனால்  இரவு  மட்டுமின்றி பகல் நேரத்தில் கூட தெருவில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை நடமாடவே முடியவில்லை  என்றார்.


சிறுமியை கடித்துக் குதறிய நாய் 
திருச்சி மதுரை ரோடு வள்ளுவர் நகரை சேர்ந்தவர் காஜா.  மனநலம் பாதிக்கப்பட்ட அவரது  மனைவியை ஏர்வாடி தர்ஹாவில் தங்க வைத்துள்ளார். அவருடன் தங்கியுள்ள  மகள் ஜீனி (7) தர்ஹாவுக்கு சொந்தமான பள்ளியில்  2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 
இந்நிலையில்,  சனிக்கிழமை திருச்சி வந்திருந்த ஜீனி செவ்வாய்க்கிழமை காலை வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது தெரு நாய் ஒன்று ஜீனி மீது பாய்ந்து கடித்துக் குதறியது. இவருடைய அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் நாயை விரட்டி சிறுமியை மீட்டனர். இதில், பலத்த காயமடைந்த ஜீனி  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமும் 5 பேருக்கு நாய்க் கடி ஊசி 
தினசரி 5 பேர் நாய் கடிக்காக ஊசி போட வருவதும், ஒருமுறை நாய் கடித்தால் தொடர்ந்து 4 முறை ஊசி போட வேண்டும் எனவும்  நாய்கடி மருந்து போதுமான அளவு இருப்பு உள்ளதாக வும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com