கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய கார் திருடன் திருச்சியில் கைது

ஆந்திர மாநில கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய கார் திருடன் திருச்சியில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநில கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய கார் திருடன் திருச்சியில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 6 கார்கள், 30 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் உலகநாதபுரம் அண்ணா தெருவைச் சேர்ந்த பிரசாத் மனைவி கிருஷ்ணவேணி(54). சுற்றுலா மாளிகை எதிர்புறம் மாநகராட்சி குப்பை பிரிக்கும் மையம் அருகே ஆக.14ஆம் தேதி இரவு நிறுத்தப்பட்டிருந்த இவரது கார் மாயமாகி இருந்தது. 
இதுகுறித்து கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ பஞ்சப்பட்டியைச் சேர்ந்த அ.சுரேஷ் (42) மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் மீது திருச்சி, திண்டுக்கல், கரூர், பழநி, திருவண்ணாமலை, வேலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கார் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் பதிவாகியிருந்ததும், இதனிடையே திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வியாபாரியிடம் ரூ.7,000 வழிப்பறி செய்ததாக கைதானது தெரியவந்தது. அதனடிப்படையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருச்சி, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் 7 கார்களைத் திருடியதும், அவற்றை ஆந்திர மாநிலத்தில் உள்ள கடத்தல் பேர்வழிகளுக்கு விற்பனை செய்யவிருந்தது தெரியவந்தது.
திருச்சி சுற்றுலா மாளிகை அருகே திருடப்பட்ட கார் சென்னை திருமங்கலம், கே.கே.நகர், செங்கல்பட்டு, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை திருடியதும், பின்னர் அவற்றை ஆங்காங்கே மறைத்து வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் திருச்சி -வயலூர் சாலையில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை மற்றும் பொருள்களை சுரேஷ் திருடியதை சுரேஷ் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரைக் கைது செய்த தனிப்படை போலீஸார், 6 கார்கள், தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவத்தில் சிறப்பாக செயலாற்றிய தனிப்படை போலீஸாரை, மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் பாராட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com