பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

திருச்சி  பொதுப்பணித் துறை  தலைமைப் பொறியாளர் ( நீர்வள ஆதார அமைப்பு) அலுவலகத்தை  தேசிய மற்றும்

திருச்சி  பொதுப்பணித் துறை  தலைமைப் பொறியாளர் ( நீர்வள ஆதார அமைப்பு) அலுவலகத்தை  தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
திருச்சி -புதுக்கோட்டை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்துக்கு  சங்கத்தின் தலைவர் பொ. அய்யாக்கண்ணு தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள்,  வெள்ளிக்கிழமை காலை வந்தனர். தலைமைப் பொறியாளர் முக்கொம்பு மேலணைப் பகுதிக்குச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், தலைமைப் பொறியாளர் வரும் வரை  அலுவலகத்தை விட்டுச் செல்ல மாட்டோம் எனக் கூறி விவசாயிகள் அங்கேயே அமர்ந்திருந்தனர். முற்பகல் 11.30 மணிக்கு தலைமைப் பொறியாளர் ஆர்.செந்தில்குமார், கண்காணிப்புப் பொறியாளர் தி.பெ. கணேசன்  ஆகியோர் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதைத் தொடர்ந்து அவர்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். 
அந்த மனுவில் கூறியிருப்பது: மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 58 நாள்களுக்கு மேலாகிறது. புள்ளம்பாடி,பெருவளை, அய்யன் வாய்க்கால்களில் முழுமையான அளவு தண்ணீர் திறக்காததால், சாகுபடி செய்யமுடியாமல் நாற்றுகள் காய்ந்துள்ளன. ஏற்கெனவே அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் 20 லட்சம்  ஏக்கரில் சாகுபடி செய்திருக்கலாம்.  எனவே தற்போதாவது  உரிய நடவடிக்கை  எடுத்து விவசாயிகளுக்குத் தண்ணீர்கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும், காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள்,  மேட்டூர்-வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் ,பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தின் கடைமடைப் பகுதி வரை காவிரி தண்ணீர் செல்ல மேட்டூர்- அய்யாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனக் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட பின்னர், விவசாயிகளுடன் தலைமைப் பொறியாளர் ஆர்.செந்தில்குமார்,  கண்காணிப்புப் பொறியாளர் கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் திங்கள்கிழமைக்குள் 400 கன அடி வீதம் வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com