காவிரிஆற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாநகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும்


விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாநகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வடிவ விநாயகர் சிலைகள் சனிக்கிழமை மாலை முதல் காவிரிஆற்றில் கரைக்கப்பட்டன.
திருச்சி மாநகரில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 201 விநாயகர் சிலைகளும், அனுமதி பெறாமல் 87 இடங்களிலும் என 288 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதேபோல, மாவட்டப் பகுதிகளில் 1,030 விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.
மாநகரில் : திருச்சி மாநகர்ப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் சனிக்கிழமை மாலை காவிரிஆற்றில் கரைக்கப்பட வேண்டும் என ஏற்கெனவே காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்ததால், காவிரிப் பாலத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சிந்தாமணியிலிருந்து காவிரிப் பாலம் வழியாக ஸ்ரீரங்கம் நோக்கிச் செல்லும் போது பாலத்தின் இடதுப்புறத்தில் விநாயகர் சிலைகளை வாகனத்தில் இருந்து இறக்கி ஆற்றில் தள்ளிவிடுவதற்காக மூன்று இடங்களில் சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு காவிரிஆற்றில் தள்ளிவிடப்பட்டன. மாலை 5 மணிக்கு மேல் விநாயகர் சிலைகளின் விசர்ஜனம் தொடங்கி நள்ளிரவு வரைத் தொடர்ந்து நடைபெற்றது.
இதுபோல, ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வரும் சாலையில் காவிரிஆற்றின் இடதுப்புறத்திலும் மூன்று இடங்களில் சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டு அதில் சிலைகள் வைக்கப்பட்டு ஆற்றில் தள்ளிவிடப்பட்டன. மேலும், வீடுகளில் வைத்துபூஜை செய்த விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆற்றில் போடுவதற்கும் தனித்தனியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து விநாயகர் சிலைகள் கரைப்பு: மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஊர்வலமாக மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள், தாரைத் தப்பட்டைகள் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன. கடந்தாண்டில் காவிரிஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையில், நிகழாண்டில் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் செல்வதால், மிகுந்த உற்சாகத்துடன் விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டன. நள்ளிரவு வரையிலும் விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு கரைக்கும் பணி நடைபெற்றது.
காவல்துறை கண்காணிப்பு: காவிரிஆற்றின் இருபகுதிகளிலும் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியை மேற்கொள்வதற்காகவும், பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை விடுப்பதற்கும் மேடை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. காவிரிஆற்றுப் பாலத்தின் இருபுறங்களிலும் 6 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸார் நவீன வேன் மூலம் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர்.
இதைத் தவிர மாநகரக் காவல் துணை ஆணையர் ( குற்றம் மற்றும் போக்குவரத்து) ஆ. மயில்வாகனன் தலைமையில், காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் காவிரிப் பாலத்தின் இருபகுதிகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு ரோந்துப் பணியை மேற்கொண்டனர்.
பள்ளிவாசல்பகுதிகளில் தீவிர பாதுகாப்பு: மாநகரில் பதற்றம் நிறைந்தவையாகக் கண்டறியப்பட்ட 26 பள்ளிவாசல்களில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை தொடர்பு அதிகாரிகளாக நியமித்து, தொழுகை நடைபெறும் நேரத்திலோ அல்லது ஊர்வலம் நடைபெறும் நேரத்திலோ அசம்பாவிதங்கள் ஏதும் நேராத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
போக்குவரத்து நெரிசல் : மாநகரில் காவல்துறை சார்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டாலும் இரவு 7 மணி வரை ஸ்ரீரங்கம் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வந்த நகரப் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரிய சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட போது காவிரிப் பாலத்தில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டதால் பாலத்தில்
நெரிசல் ஏற்பட்டது.

மணப்பாறை
 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் துவரங்குறிச்சி, புத்தாநத்தம், இளங்காகுறிச்சி ஆகிய பகுதிகள் காவல்துறையால் பதற்றம் நிறைந்த ஊர்வலப்பகுதியாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2014 முதல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த இளங்காகுறிச்சி பகுதியில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விநாயகர் சிலை பிரதிஷ்டை, விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றுவருகிறது.
நிகழாண்டில் இளங்காகுறிச்சி புதுமாரியம்மன் கோயில் பகுதியில் விநாயகர் சதுர்த்தியில் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற இருந்த நேரத்தில், ஒரு தரப்பினர் நீதிமன்ற உத்தரவை காவல் துறையினர் அலட்சியப் போக்குடன் கையாளுவதாகக்கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விநாயகர் ஊர்வலம் காலதாமதம் ஆவதைக் கண்டித்தும், விஷ்வ இந்து பரிஷத் மாநில பொருளாளர் என்.ஆர்.என்.பாண்டியனை வழிபாட்டுக்கு அனுமதிக்க வலியுறுத்தியும் மறுதரப்பைச் சேர்ந்தவர்கள் புத்தாநத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மணப்பாறை - மதுரை சாலையில் சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மறியல் போராட்டமும் கைவிடப்பட்டது. தொடர்ந்து, விநாயகர் விசர்ஜன ஊர்வலம் தொடங்கியது. புதுமாரியம்மன் கோவில் பகுதியின் வீதிகளில் உலா வந்த விசர்ஜன ஊர்வலம் சரியாக மதியம் 1.40 மணியளவில் சர்ச்சைக்குரிய பள்ளிவாசல் பகுதியைக் கடந்தது. அங்கிருந்து பாரதியார்நகர், அயன்ரùட்டியப்பட்டி, ஆர்.எஸ்.கேட், வையம்பட்டி வழியாக சென்று பொன்னணியாறு அணையில் மாலையில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
துறையூர் வட்டத்தில் அமைக்கப்ப்பட்ட 55 விநாயகர் சிலைகளை புறவழிச்சாலை வழியாக முசிறி ஆற்றில் கரைப்பதற்காக எடுத்துச்சென்றனர். இதேபோல் உப்பிலியபுரம் பகுதியில் 15 விநாயகர் சிலைகள் புளியஞ்சோலை ஆற்றில் கரைப்பதற்காகவும், 28 சிலைகள் முசிறி ஆற்றிலும் கரைப்பதற்காகவும் விழாக்குழுவினர் எடுத்துச் சென்றனர். அசம்பாவிதங்களை தடுக்க போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com