ஜி.அரியூரில் மூடப்பட்ட மதுக் கடையை திறக்கக் கூடாது: ஆட்சியரகத்தில் கிராம மக்கள் மனு
By விழுப்புரம் | Published on : 17th April 2018 08:34 AM | அ+அ அ- |
திருக்கோவிலூர் அருகே ஜி.அரியூரில் மூடப்பட்ட அரசு மதுக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியர், எஸ்.பி. ஆகியோரிடம் மனு அளித்தனர்.
ஜி.அரியூரில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக் கடை அப்பகுதி மக்களின் வலியுறுத்தல் காரணமாக மூடப்பட்டது. ஆனால், அந்த கடையை மீண்டும் திறக்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு கடந்த இரு வாரங்களாக வந்து மனு அளித்தனர். அவர்கள் மதுக்கடை செயல்பட்டு வந்த கட்டடத்தின் உரிமையாளரின் ஆதரவாளர்கள் எனக் கூறப்பட்டது.
தொடர்ந்து இவ்வாறு மனு அளிக்கப்படுவதால், ஜி.அரியூரில் மீண்டும் மதுக்கடை திறக்கப்படலாம் என்ற தகவல் பரவியது. இதையடுத்து அந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன், சிலரை மட்டும் ஆட்சியரை சந்திக்க அனுமதி அளித்தார்.
அதன்படி, கிராம மக்களில் சிலர் சென்று ஆட்சியரை சந்தித்து, தங்களது ஊரில் மதுக் கடையை மீண்டும் திறக்கக் கூடாது எனக் கோரி மனு அளித்தனர். தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் சந்தித்து மனு அளித்தனர்.