ஏப்.20-இல் 33 கிராமங்களில் சமையல் எரிவாயு விழிப்புணர்வு: இந்தியன் ஆயில் அதிகாரி தகவல் 

விழுப்புரம் மாவட்டத்தில் 33 கிராமங்களில் வருகிற 20-ஆம் தேதி சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று இந்தியன் ஆயில் அதிகாரி தெரிவித்தார். 

விழுப்புரம் மாவட்டத்தில் 33 கிராமங்களில் வருகிற 20-ஆம் தேதி சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று இந்தியன் ஆயில் அதிகாரி தெரிவித்தார்.
 இதுகுறித்து மாவட்ட இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ரோஷினி கூறியதாவது:
 மத்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வருகிற 20-ஆம் தேதி கிராமங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சமையல் எரிவாயு முகவர்களும் தலா ஒரு கிராமங்களுக்குச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவர். அதில், ஏற்கெனவே சமையல் எரிவாயுவை பயன்படுத்தும் நபர்களின் அனுபவங்கள், அவர்களின் கருத்துகள் கேட்கப்படும். மேலும், சமையல் எரிவாயு இணைப்பு இல்லாதவர்களுக்கு இலவசமாகவோ அல்லது கட்டணம் மூலமாகவோ இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 கடந்த 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த கணக்கெடுப்பில் இல்லாவிட்டாலும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள எஸ்.சி., எஸ்.டி பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், 35 கிலோ அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர், தீவுகளில் வசிக்கும் பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் இலவசமாக இணைப்பு பெறும் வசதி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலவசமாக பெறமுடியாதவர்கள் கடன் மூலமாக இணைப்புப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். அந்த கடன் தொகை 6 சிலிண்டர்களைப் பெற்ற பிறகு, அடுத்தடுத்த சிலிண்டருக்கான மானியத்தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
 காப்பீடு உண்டு: வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் காப்பீடு உள்ளது. சமையல் எரிவாயு உருளையில் தீ விபத்து ஏற்பட்டால், அந்த விபத்தை ஆய்வு செய்து இழப்பீடு வழங்கப்படும். இதற்கு முன்னதாக நடைபெற்ற விபத்துகளில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விபத்துத் தகவல் அல்லது புகார்களை 1906 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சிலிண்டர் விலையைவிட கூடுதலாக கட்டணம் அளிக்கத் தேவையில்லை. அதிக கட்டணம் கேட்டாலும் புகார் செய்யலாம் என்று கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com