காசநோய் கண்டறியும் நடமாடும் ஆய்வுக் கூடம்: ஏப். 21 வரை கிராமங்களில் வலம் வருகிறது 

விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 21-ஆம் தேதி வரை பல்வேறு கிராமங்களுக்குச் சென்று காசநோய் கண்டறியும் நடமாடும் ஆய்வுக் கூட சேவையை ஆட்சியர் இல.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 21-ஆம் தேதி வரை பல்வேறு கிராமங்களுக்குச் சென்று காசநோய் கண்டறியும் நடமாடும் ஆய்வுக் கூட சேவையை ஆட்சியர் இல.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
 திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், நடமாடும் காசநோய் கண்டறியும் அதிநவீன ஆய்வுக் கூட சேவைத் தொடக்க விழா விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட ஆட்சியரக நுழைவாயில் பகுதியிலிருந்து இந்த வாகன சேவையை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
 அப்போது அவர் பேசியதாவது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 24-ஆம் தேதி அதிநவீன கருவி அடங்கிய காசநோய் கண்டறியும் ஆய்வுக் கூட வாகன சேவையை சென்னையில் தொடக்கி வைத்தார். இந்த வாகனம் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப் பயணம் செய்து, காசநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் பொதுமக்களிடையே காசநோய் பரிசோதனையும் மேற்கொண்டு வருகிறது.
 விழுப்புரம் மாவட்டத்தில் இந்த வாகனம் ஏப்ரல் 16-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் வருகிற 21-ஆம் தேதி வரை கண்டமானடி, சிறுவந்தாடு, மயிலம், கிளியனூர், சந்தியமங்கலம், மேல்சித்தாமூர், ஒலக்கூர், முகையூர், ரிஷிவந்தியம், கரியாலூர், இருவேல்பட்டு, எலவனாசூர்கோட்டை, திருநாவலூர் ஆகிய காசநோய் அலகுக்கு உள்பட்ட கிராமத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களிடையே காசநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும். அப்போது, பொதுமக்களுக்கு சளி பரிசோதனையும் செய்யப்படும்.
 அதிநவீன கருவிகள் அடங்கிய இந்த வாகனம் உங்கள் வீடுதேடி வருவதால், இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல், சளி இருப்பவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சளி பரிசோதனை செய்து பயன்பெற வேண்டும். மேலும், காசநோயை துரிதமாகவும், துல்லியமாகவும் கண்டறியும் கருவி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைகளில் உள்ளது. அதனையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் ஆட்சியர் இல.சுப்பிரமணியன்.
 தொடர்ந்து, காசநோய் பணியாளர்களுக்கு காசநோயாளர்களின் விவரத்தை இணையத்தில் தினமும் பதிவேற்றம் செய்ய கையடக்கக் கணினி, கருவிகளை ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் நேரு, காசநோய் பிரிவு துணை இயக்குநர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com